வடகொரியா-தென்கொரியா பரஸ்பர ஏவுகணை வீச்சு: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்


வடகொரியா-தென்கொரியா பரஸ்பர ஏவுகணை வீச்சு: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்
x

வடகொரியாவும், தென்கொரியாவும் பரஸ்பர ஏவுகணை வீச்சில் ஈடுபட்ட சம்பவம் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சியோல்,

1950-களில் நடந்த கொரிய போரின் போது வடகொரியாவும், தென்கொரியாவும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான பகைமை நிலவி வருகிறது. வடகொரியாவின் அணு ஆயதங்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் தென்கொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் தென்கொரியாவுக்கு பக்கபலமாக இருந்து வரும் அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, வடகொரியா மீது பொருளாதார தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கூட்டுப்போர் பயிற்சி

அதுமட்டும் இன்றி வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக அமெரிக்க படைகள் கொரிய படைகளுடன் இணைந்து, ஆண்டுதோறும் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த கூட்டுப்போர் பயிற்சியை ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த சூழலில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் அமெரிக்க மற்றும் தென்கொரிய படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின.

ஒரே நாளில் 23 ஏவுகணைகள்

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருகிறது. மேலும் அந்த நாடு அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாகவும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் உளவுத்துறைகள் எச்சரித்து வருகின்றன.

இந்த நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை தென்கொரியா எல்லையை நோக்கி வீசியது. வானில் இருந்து புறப்பட்டு தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் இந்த ஏவுகணைகள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையை நோக்கி வீசப்பட்டன.

தென்கொரியா பதிலடி

அவற்றில் ஒரு ஏவுகணை இருநாடுகளுக்கு இடையிலான கடல் எல்லையை கடந்து தென்கொரியாவின் சோக்சோ நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்தது.

இதனால் பெரும் பதற்றம் உருவானது. ஏவுகணை விழுந்த பகுதிக்கு அருகில் அமைந்துள்ள தென்கொரியாவின் உல்லியுங் தீவில் வான்வழி தாக்குதல் பற்றி எச்சரிக்கும் 'சைரன்' ஒலிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தீவில் வசிக்கும் மக்கள் சுரங்க பகுதிகளுக்கு சென்று பதுங்க அறிவுறுத்தப்பட்டனர்.

வடகொரியாவின் ஏவுகணை தென்கொரியா கடலில் விழுந்ததை தொடர்ந்து அதற்கு பதிலடியாக தென்கொரியா வடகொரியாவை நோக்கி 3 ஏவுகணைகளை வீசியது.

போர் பதற்றம்

அந்த ஏவுகணைகள் வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதுபற்றி வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதே சமயம் தங்கள் எல்லைக்குள் வடகொரியா ஏவுகணையை வீசியதற்கு தென்கொரியா அதிபர் யூன் சுக்-யோல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இருநாடுகளும் வடகொரியாவை கண்டித்துள்ளன.

இதனிடையே வடகொரியாவும், தென்கொரியாவும் பரஸ்பர ஏவுகணை வீச்சில் ஈடுபட்ட சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் உருவாகி உள்ளது.


Next Story