எல்லை மீறிய வடகொரிய ரோந்து படகு; துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்த தென்கொரியா


எல்லை மீறிய வடகொரிய ரோந்து படகு; துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்த தென்கொரியா
x

தென்கொரிய கடல் எல்லை பகுதிக்குள் அத்துமீறி வடகொரிய ரோந்து படகு நுழைந்ததற்காக அந்நாட்டு ராணுவம் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்து உள்ளது.

சியோல்,

கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர்ச்சியாக பல ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், அந்த பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும் கூட்டுப்போர் பயிற்சிகளை முறைப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், வடகொரிய ரோந்து படகு ஒன்று குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட தனது கடல் எல்லை பகுதியை கடந்து தென்கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தென்கொரிய ராணுவம் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்து உள்ளது.

இதுபற்றி தென்கொரிய முப்படைகளின் தலைமை தளபதி இன்று வெளியிட்ட அறிக்கையில், வடகொரிய ரோந்து படகு ஒன்று அந்நாட்டின் வடக்கு எல்லை கோட்டு பகுதியை கடந்து எங்களது பகுதிக்குள் வந்தது.

இதனால், அதனை எச்சரிக்கை செய்யும் வகையில், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எங்களுடைய ராணுவம் எதிரிகளின் செயல்பாடுகளை கண்காணித்து, போரை எதிர்கொள்ள தயாரான நிலையில் நிறுத்தப்பட்டு, தொடர்ந்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.

இந்த நடவடிக்கையில், தெளிவற்ற வானிலையால் அருகேயிருந்த சீன மீன்பிடி படகு ஒன்றுடன் தென்கொரிய ரோந்து கப்பல் லேசாக உரசியது. இதனால், பாதுகாப்பு விவகாரங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தென்கொரிய கப்பல் ஊழியர்களுக்கு லேசான அளவில் காயங்கள் ஏற்பட்டன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீப வாரங்களாக வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகள், கொரிய பகுதியில் பதற்றம் அதிரிக்கும் வகையில் அமைந்து உள்ளன. கடந்த வெள்ளி கிழமை அந்நாடு ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story