இலங்கையில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு இரு வேளை உணவளிக்கும் அறக்கட்டளை!


இலங்கையில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு இரு வேளை உணவளிக்கும் அறக்கட்டளை!
x
தினத்தந்தி 18 May 2022 3:11 PM GMT (Updated: 18 May 2022 7:19 PM GMT)

எங்கள் வேலை போனாலும் கவலையில்லை; வருங்கால தலைமுறைக்காக போராட்டம் தொடரும் என்கின்றனர்.

கொழும்பு,

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்க முடியவில்லை. அதே நேரத்தில் மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூட வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிராகவும், அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, வேலையில்லாதவர்கள் உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினமும் இரண்டு வேளை உணவுக்காக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார். மேலும், மக்கள் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

போராடி வரும் நூற்றுக்கணக்கான மக்கள் கொழும்புவில் உள்ள காலே முகத்திடலில் உணவுக்காக வரிசையில் நிற்கின்றனர். அதில் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் தற்போதைய நெருக்கடி காரணமாக வேலை இழந்தவர்கள் உட்பட பலர் அடங்குவர். அங்கு கொழும்புவில் உள்ள ஒரு என்ஜிஓ அறக்கட்டளை மூலம் உணவு வழங்கப்படுகிறது.

கொழும்புவை சார்ந்த அறக்கட்டளையால் வழங்கப்படும் உணவுக்காக, நீண்ட வரிசை காத்துக்கிடக்கிறது. அறக்கட்டளையை சேர்ந்த சமூக சேவகரான அகுஷ்லா பெர்னாண்டோ கூறியதாவது:-

"உலகம் முழுவதிலுமிருந்து பணம், பொருட்கள் மற்றும் உணவு உள்ளிட்ட நன்கொடைகளை எனது அறக்கட்டளைக்கு கிடைக்கிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கியுள்ளோம். ஏப்ரல் 9ம் தேதி முதல் உணவு விநியோகம் செய்ய ஆரம்பித்தோம். வேலை செய்பவர்கள், வேலையில்லாதவர்கள் உட்பட பலர் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும், போராட்டத்தால் வேலை இழந்த சிலர் இங்கு வருகின்றனர். அவர்கள் தங்கள் தலைமுறைக்காக போராட்டம் நடத்துவதால் வேலையை இழப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறுகிறார்கள். எங்கள் வேலை போனாலும் கவலையில்லை; வருங்கால தலைமுறைக்காக போராட்டம் தொடரும் என்கின்றனர்.

மக்களைக் கவனிக்க முடியாமல், நாட்டை ஆளத் தவறியதால், அதிபர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த மற்றொரு நபரான ஷெர்வின் ரணதுங்க கூறியதாவது, "இலங்கை முழுவதிலும் இருந்து பல்வேறு வகையான மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் தொலைதூரத்திலிருந்து பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ரெயில்களில் வருகிறார்கள். அனைவருக்கும் நாங்கள் உணவை வழங்குகிறோம்" என்றார்.

Next Story