சிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு


சிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
x

வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணனுடன் 60 ஆண்டுகால தூதரக உறவு பற்றி ஜெய்சங்கர் பேசினார்.

சிங்கப்பூர்,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 3 நாட்கள் பயணமாக கடந்த 23-ந்தேதி சிங்கப்பூர் சென்றார்.

இந்நிலையில், கடைசி நாளான நேற்று அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

சிங்கப்பூர் மூத்த மந்திரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணனுடன் 60 ஆண்டுகால தூதரக உறவு பற்றி பேசினார். இந்தோ-பசிபிக் விவகாரங்கள், மேற்கு ஆசிய பிரச்சினை ஆகியவை பற்றியும் விவாதித்தார்.

சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட மந்திரி கே.சண்முகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி கன் கிம் யாங், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மந்திரி டியோ சீ ஹீன், நிதி மந்திரி லாரன்ஸ் வாங் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

பின்னர், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story