லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; ஹிஜ்புல்லா தாக்குதலுக்கு பதிலடி


லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; ஹிஜ்புல்லா தாக்குதலுக்கு பதிலடி
x

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், லெபனானின் வடகிழக்கு பகுதியில் பால்பெக் நகரில் இன்று காலை வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

டெல் அவிவ்,

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்த திட்டமிட்டு, அதனை செயல்படுத்தி வருகிறது. காசா நகரின் ரபா பகுதியில் தரை, வான்வழி தாக்குதலை நடத்த முனைப்புடன் உள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் வடபகுதியில் ராக்கெட், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை கொண்டு ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு வார தொடக்கத்தில், பல்வேறு முறை தாக்குதல்களை நடத்தியது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் அரசு தயாரானது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், லெபனானின் வடகிழக்கு பகுதியில் பால்பெக் நகரில் இன்று காலை வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. ஹிஜ்புல்லாவின் தாக்குதலை அடுத்தே, இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இஸ்ரேல் எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் பால்பெக் நகரம் உள்ளது. போர் தொடங்கியதில் இருந்து 4-வது முறையாக இஸ்ரேல் இந்த பகுதியை தாக்கியுள்ளது என டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த வார தொடக்கத்தில் கூட, இஸ்ரேல் ராணுவத்தினர், காசாவின் அல்-ஷிபா மருத்துவமனை மீது குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலுக்கு எதிராக ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், இந்த பகுதியை பயன்படுத்தி கொள்ளும் வகையில், கூடியுள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து, இந்த தாக்குதல் நடைபெற்றது.

இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படை, காசா பகுதியில் உள்ள மிக பெரிய ஷிபா மருத்துவமனையில் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதனை அறிந்ததும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், கடந்த திங்கட்கிழமை காலை முதல் இதுவரை 140-க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளை படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய 160 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடத்துவதற்காக, அவர்கள் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனை வளாகத்தில் கண்டறியப்பட்ட ஆயுதங்களையும் வீரர்கள் கைப்பற்றினர். எனினும், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் படையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்து கொண்டு ராக்கெட் தாக்குதல்களை நடத்துதல், கட்டிடத்தின் மைய பகுதியில் பணய கைதிகளை மறைத்து வைப்பது, சித்ரவதை செய்வது, அருகேயுள்ள பகுதிகளுக்கு சுரங்கங்களை தோண்டுவது என பல விரிவான விசயங்களுக்கு மருத்துவமனையை அந்த அமைப்பு பயன்படுத்தி வந்திருக்கிறது.

வளாகத்தின் கீழே 5 லட்சம் லிட்டர் எரிபொருளை மறைத்து வைத்தது பற்றிய தொலைபேசி அழைப்பு பதிவு ஒன்றையும் இஸ்ரேல் அரசு சமீபத்தில் வெளியிட்டது. இந்த சூழலிலேயே, லெபனானில் இருந்து கொண்டு, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து, இஸ்ரேலும் பதிலடி தாக்குதல் நடத்தியது.


Next Story