இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரம்: ஐ.நா. மனித உரிமைகள் இயக்குநர் ராஜினாமா
இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
நியூயார்க்,
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 3 வாரங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் இயக்குநர் கிரேக் மொகிபேர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காசா முற்றுகை விவகாரத்தில் ஐ.நா. சபை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.