ஈரானின் அடுத்த அதிபர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு


Iran Begins Voting In Presidential Election
x

இறுதி வேட்பாளர் பட்டியலில் 6 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி ஆகியோர் போட்டியில் இருந்து விலகினர்.

தெஹ்ரான்:

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கடந்த மாதம் 19-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரான் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

ஈரான் அதிபர் பதவிக்கான இறுதி வேட்பாளர் பட்டியலில் முகமது பாகர் கலிபாப், சயீத் ஜலிலி, மசூத் பெஜெஷ்கியான், முஸ்தபா பூர்மொஹம்மதி, அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி ஆகியோர் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி ஆகியோர் போட்டியில் இருந்து விலகினர். இதனால் 4 பேருக்கிடையே போட்டி நிலவுகிறது.

தெஹ்ரானில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்ட ஈரான் தலைவர் அயதுல்லா

இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடிக்கும் என தெரிகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தவண்ணம் உள்ளது. இந்த முறை மக்கள் அதிக அளவில் ஓட்டு போட வேண்டும் என தலைவர் அயதுல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. எனவே, வாக்கு எண்ணும் பணி முடிவடைய இரண்டு நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் வெற்றியாளர் குறித்த முன்னிலை நிலவரம் வெளியாகிவிடும்.

எந்த வேட்பாளரும் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகளை பெறவில்லை என்றால், அதிக வாக்குகள் பெறும் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய முதல் வெள்ளிக்கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறும்.


Next Story