கனடாவில் இந்து கோவில்களை உடைத்து கொள்ளை.. கனடா வாழ் இந்தியர் கைது
அவரது குற்றங்கள் வெறுப்பு குற்றங்களாகவோ அல்லது தூண்டப்பட்ட குற்றங்களாகவோ தெரியவில்லை என்று டர்ஹாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
டொராண்டோ:
கனடாவின் டர்ஹாம் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள இந்து கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இந்து கோவில்களை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக கனடா வாழ் இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் பெயர் ஜெகதீஷ் பாந்தர் (வயது 41) என்பதும், அவர் பிராம்ட்டன் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
எனினும், அவர் செய்த குற்றங்கள் வெறுப்பு குற்றங்களாகவோ அல்லது தூண்டப்பட்ட குற்றங்களாகவோ தெரியவில்லை என்று டர்ஹாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், இந்த ஆண்டு முழுவதும் கனடாவில் உள்ள பல்வேறு இந்து கோவில்களை உடைத்து கொள்ளையடித்ததில் தொடர்புடையவர் என்று போலீசார் கூறுகின்றனர்.