இம்ரான்கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி; போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே மோதல்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி இன்று பேரணி நடைபெற்றது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கிடையில், தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறியும், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்துவருகிறார். மேலும், தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது பாகிஸ்தான் தெக்ரிக் - ஐ - இன்சஃப் கட்சி ஆதரவாளர்களுடன் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி இன்று பேரணியாக சென்றார்.

இந்த பேரணியை தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். தடுப்புகளையும் மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் தலைநகர் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டதால் போலீசாருக்கும் பேரணியாக சென்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


Next Story