"என் பேச்சு உங்கள் முன் வரும் போது நான் கைதாகி இருப்பேன்" - தீயாய் பரவும் இம்ரான்கான் வீடியோ


என் பேச்சு உங்கள் முன் வரும் போது நான் கைதாகி இருப்பேன் - தீயாய் பரவும் இம்ரான்கான் வீடியோ
x

இம்ரான்கான் கைதைக் கண்டித்து இஸ்லாமாபாத்தில் 144-வது பிரிவின்கீழ் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரராக இருந்து 'பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2018-ல் ஆட்சியைப் பிடித்து அதிர வைத்தவர், இம்ரான்கான் (வயது 70). ஆனால் கிரிக்கெட்டைப் போன்று அரசியல்களம் அவருக்கு தொடர்ந்து வெற்றியைத் தரவில்லை.

அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. இதுவரை இல்லாதவகையில், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றின. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி அவரது பதவி பறிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது சோதனைக்காலம் தொடங்கியது. அவர் மீது பயங்கரவாதம், மத நிந்தனை, கொலை, வன்முறை, வன்முறையைத் தூண்டுதல் என 140-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.

இம்ரான்கான், ராணுவம் தன்னை கொலை செய்ய சதி செய்துள்ளதாகவும், இதில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் (ஐ.எஸ்.ஐ.) உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் பைசல் நசீருக்கு தொடர்பு இருப்பதாகவும் நேற்று முன்தினம் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். ஆனால் இதை அடிப்படையற்ற குற்றச்சாட்டு என கூறி பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில், இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக லாகூரில் இருந்து நேற்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு வந்தார். அங்கு அவர் தனது வருகையைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த துணை ராணுவத்தினர் அவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். இம்ரான்கானின் சட்டை காலரைப் பிடித்து இழுத்து, குண்டுக்கட்டாக தூக்கி சிறை வாகனத்தில் போட்டதைக் காட்டும் காட்சிகள் டி.வி. சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. கைது செய்யப்பட்ட இம்ரான்கான், ராவல்பிண்டியில் உள்ள ஊழல் தடுப்பு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இம்ரான்கான் கைதைக் கண்டித்து இஸ்லாமாபாத்தில் 144-வது பிரிவின்கீழ் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நாடெங்கும் பல்வேறு நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் வன்முறைப் போராட்டங்களில் இறங்கினர். கராச்சி, பெஷாவர், லாகூர் என பல நகரங்களிலும் இம்ரான்கான் கட்சித்தொண்டர்கள் படையெடுத்து போராட்டங்களில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வெடித்தனர். இதன் காரணமாக பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

கைதுக்கு முன்பு வீடியோ

இம்ரான்கான் கைது நடவடிக்கையை எதிர்பார்த்து, கைது செய்யப்படுவதற்கு முன்பாக பதிவுசெய்த ஒரு வீடியோ, அவரது கைதைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இம்ரான் கான், இந்த பேச்சு வந்து சேர்வதற்குள், சட்டத்திற்கு புறம்பான ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பேன் என கூறியுள்ளார். இதன் பின்னர் அடிப்படை உரிமைகள், சட்டம் மற்றும் ஜனநாயகம் ஆகியவை புதைக்கப்பட்டு விட்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மக்களை மீண்டும் சந்தித்து பேச முடியாமலும் போகலாம் என்றும், இம்ரான்கான் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.





Next Story