கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க ஜெர்மனி திட்டம் என தகவல்


கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க ஜெர்மனி திட்டம் என தகவல்
x

2024-க்குள் கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெர்லின்,

உலகம் முழுவதும் பல நாடுகளில் கஞ்சாவை உபயோகிக்க மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ள நிலையில் ஜெர்மனி தற்போது கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இந்த திட்டம், ஜெர்மனி அரசால் கொண்டுவரப்படும் நிலையில், ஜெர்மனி உறுப்பினராக இருக்கும் ஐரோப்பியன் யூனியனிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை ஜெர்மனி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவிற்கு அனுமதி அளிக்கும் புதிய சட்டம் வரும் 2024 ம் ஆண்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளது. ஜெர்மனியில் ஆட்சியில் இருக்கும் கூட்டணி அரசு முந்தைய வருடம் இதற்கான வாக்குறுதியை அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 2024-க்குள் கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளதாகவும் வயது வந்தோர் அதிகபட்சம் 30 கிராம் வரை பயன்படுத்தும் வகையில் சட்டம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் கஞ்சாவுக்கு சட்டரீதியான அனுமதி வழங்கிய முதல் ஐரோப்பிய நாடு என்ற பெயரை ஜெர்மனி பெறும் என தெரிகிறது.

இந்த திட்டத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி நாடுகளிலும் கஞ்சா சிறிய அளவில் பயன்பாட்டில் உள்ளது. மேலும் பெரும்பாலான நாடுகளில் கஞ்சா மருத்துவ பயன்களுக்காக உபயோகிக்கப்படுகிறது. அமெரிக்காவில் தான் பெரும்பாலான மாகாணங்களில் கஞ்சா மருத்துவ பயனுக்காக உபயோகிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, கனடா, உருகுவே, பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.


Next Story