தீவிர வலதுசாரி ஆட்சியா.. தொங்கு நாடாளுமன்றமா..? பிரான்சில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு


France Elections
x

இன்று இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கும். நாளை அதிகாலையில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸ்:

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலைத் தொடர்ந்து கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என்றும், மரீன் லி பென் தலைமையிலான தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி கட்சி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியானது.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தனது அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்தப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார். அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி, இடதுசாரிகளின் கூட்டணி மற்றும் அதிபரின் மையவாதக் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. முதல் சுற்றுத் தேர்தலில் தேசிய பேரணி கட்சி 33.2 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தது. இடதுசாரிகளின் கூட்டணி 28.1 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் இருந்தது. அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் கூட்டணி 21 சதவீத வாக்குகளுடன் பின்தங்கியது. முதல் சுற்றில் குடியேற்ற எதிர்ப்பு பிரசாரம், தேசிய பேரணி கட்சிக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

தேசிய பேரணி கட்சி முதல் சுற்றில் மூன்றில் ஒரு பங்கு பெற்றபோதிலும், இரண்டாம் சுற்றில் வெற்றி வாய்ப்பு சற்று குறைந்து வருவதாகவும், இந்த சுற்றின் முடிவில் போதுமான இடங்களைப் பெறாவிட்டால், தெளிவான பெரும்பான்மை இல்லாமல் தொங்கு நாடாளுமன்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பிரான்சின் பிரதான நிலப்பகுதி மற்றும் கோர்சிகா தீவில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவு இரவு 8 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இன்று நள்ளிரவில் முன்னிலை நிலவரம் தெரியவரும். நாளை அதிகாலையில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர், உலகளாவிய ராஜதந்திர செயல்பாடுகள் மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இந்த தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் அதிபர் இம்மானுவேல் மக்ரானின் எஞ்சிய மூன்று ஆண்டுகால பதவிக்காலத்தில் அவருக்கான அதிகாரத்தை குறைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

காரணம் இப்போது நடைபெறும் தேர்தல் என்பது பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே. இதன் மூலம் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். அதிபரும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தால் அதிபருக்கான அதிகாரம் குறையும். புதிய சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை இயற்றுவதில் அதிபருக்கு சிக்கல்கள் ஏற்படலாம்.


Next Story