இஸ்ரேலில் வங்கி வளாகத்துக்குள் திடீரென காளை புகுந்ததால் சலசலப்பு! பீதியில் பயந்து ஓடிய மக்கள்!
இஸ்ரேல் டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு வங்கியில் காளை புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெருசலேம்,
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு வங்கியில் மாடு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல் அவிவ் அருகே உள்ள டோட் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு வங்கி அலுவலகத்துக்குள் நேற்று காளை ஒன்று திடீரென புகுந்தது.
இதை கண்டதும் அலுவலகத்தின் ஹால் பகுதியின் எதிர் முனையில் இருக்கும் ஒரு சுவருக்குப் பின்னால் பலர் மறைந்து தங்களை தற்காத்துக் கொண்டனர்.
உடனே ஒரு நபர் கையில் கிடைத்த ஆரஞ்சு நிற பொருளை வைத்து அந்த காளையை தடுத்து நிறுத்த முயற்சித்தார். ஆனால் அந்த காளை முட்ட வந்ததால் உடனே அவரும் அங்கிருந்து ஓடிவிட்டார். அவர்கள் ஒரு கயிற்றைத் தூக்கி அந்த நபரிடம் வீசி அவரை உள்ளே இழுத்து காப்பாற்றினர்.
ஆனால் அந்த காளை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது. பின் ஒருவழியாக அந்த காளை வங்கியிலிருந்து வெளியேறியது.
சாலையில் வலம் வந்த அந்த காளை அங்கு நடந்து சென்றவர்களை அச்சமூட்டியது. அங்கிருந்த கார்களை சேதப்படுத்தியது. தகவல் அறிந்து பின் கால்நடைத் துறை ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று மாட்டை கட்டுப்படுத்தி கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் வங்கி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பெரும் வைரலாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.