உக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபர் புதினிடம் பேசினேனா? - எலான் மஸ்க் பதில்


உக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபர் புதினிடம் பேசினேனா? - எலான் மஸ்க் பதில்
x

பேச்சுவார்த்தைக்கு தயாராகுவதாக ரஷிய அதிபர் புதின் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்கிடம் கூறியதாக தகவல் வெளியானது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 231-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது.

இதனிடையே, போர் நடந்து வரும் உக்ரைனில் அமைதி நிலவ வேண்டுமானால் டான்பாஸ் மற்றும் கிரீமியாவில் வாழும் மக்கள் தாங்கள் ரஷியாவில் இணையவேண்டுமா அல்லது உக்ரைனில் இணைய வேண்டுமா என முடிவெடுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம், இல்லை என்ற இரு பதில்களுடன் எலன் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார்.

இதில், டான்பாஸ்க் மற்றும் கிரீமியா மாகாண மக்கள் தான் இந்த விவகாரத்தை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு 59 சதவிகித வாக்குகள் ஆம் என்றும் 41 சதவிகித வாக்குகள் இல்லை என்றும் பதிவாகின. உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து எலன் மஸ்க் தெரிவித்த இந்த ஆலோசனைக்கு உக்ரைன் நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் கிரீமியா தொடர்ந்து ரஷியாவின் கட்டுப்பாட்டிலும், லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகியவை ரஷியாவின் அங்கமாக உக்ரைன் அங்கிகரித்தால், யாருடனும் சேராமல் நடுநிலையாக இருப்போம் என உக்ரைன் உறுதியாளித்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அதிபர் புதின் தன்னிடம் தெரிவித்ததாக எலன் மஸ்க் தன்னிடம் கூறினார் என்று அரசியல் ஆபத்து சூழ்நிலை ஆலோசனை நிறுவனமான யுரோஎசியன் குரூப் தலைவர் பிரிம்மர் தெரிவித்தார்.

கிரீமியா மீது உக்ரைன் படையெடுத்தால் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என புதின் தெரிவித்ததாக எலன் மஸ்க் தன்னிடம் தெரிவித்தார் என்று பிரிம்மர் கூறினார். இது தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், உக்ரைன் போர் குறித்து புதினிடம் தான் பேசவில்லை என்று எலன் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்தியை மேற்கொள் காட்டி டுவிட்டர் பயனாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

மஸ்க் அளித்த பதிவில், இது தவறன செய்தி. உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை குறித்து நான் பேசவில்லை. நான் புதினிடம் 18 மாதங்களுக்கு முன் ஒரே ஒருமுறை பேசினேன். அதுவும், விண்வெளி தொடர்பாக தான்' என்றார்.




Next Story