ஆளும் கட்சிக்கு எதிரியாக உள்ள இம்ரான்கான் கொல்லப்படுவார் - பாகிஸ்தான் உள்துறை மந்திரி


ஆளும் கட்சிக்கு எதிரியாக உள்ள இம்ரான்கான் கொல்லப்படுவார் - பாகிஸ்தான் உள்துறை மந்திரி
x

ஆளும் கட்சிக்கு எதிரியாக உள்ள இம்ரான்கான் கொல்லப்படுவார் என்ற பாகிஸ்தான் உள்துறை மந்திரி பேச்சு பாகிஸ்தான் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகவும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார். அப்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றபோது இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். அதை தொடர்ந்து, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பும், உள்துறை ராணுவ மந்திரி ராணா சனாவுல்லா ஆகிய இருவரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ராணா சனாவுல்லா பேசும்போது, "பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான்கான் இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானின் அரசியலைக் கொண்டு சென்றிருக்கும் பாதையால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம். இம்ரான்கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார். அவர் எங்கள் எதிரி. அவ்வாறே அவர் நடத்தப்படுவார்" என்றார்.

இம்ரான்கான் குறித்த ராணா சனாவுல்லாவின் இந்த பேச்சு பாகிஸ்தான் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story