பாகிஸ்தானில் கொடூரம்... உணவு தேடி அலைந்த சிறுமியை கடத்தி, அடைத்து கூட்டு பலாத்காரம்


பாகிஸ்தானில் கொடூரம்... உணவு தேடி அலைந்த சிறுமியை கடத்தி, அடைத்து கூட்டு பலாத்காரம்
x

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு இடையே உணவு கிடைக்காமல் தேடி அலைந்த சிறுமியை கடத்தி, பல நாட்களாக அறையில் அடைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை தெரிய வந்துள்ளது.

லாகூர்,



பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு மத்தியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இதுபற்றி தி சிங்கப்பூர் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வெள்ள பாதிப்புகளில் சீரழிந்து போயுள்ள அந்நாட்டில், சிந்த் மாகாணத்தில், உணவு தேடி சென்ற ஒரு சிறுமியை, கும்பல் ஒன்று கடத்தி சென்று உள்ளது.

பின்னர், அறையில் பல நாட்கள் வரை அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்கார கொடுமையில் ஈடுபட்டு உள்ளது. சமூக ஊடகத்தில் வீடியோ வைரலான நிலையில், நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர். குற்றவாளிகளை தேடும் பணிக்கு முடுக்கி விடப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

வெள்ள பாதிப்புக்கு இடையேயும், அந்த நாட்டில் சிறுமிகள் கடத்தல், பலாத்காரம் உள்ளிட்ட வன்கொடுமைகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் பெய்து வரும் பருவகால மழை பாதிப்புகளால் பெருவெள்ளம் ஏற்பட்டு அந்நாடு நீரில் தத்தளித்து வருகிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளால் 3-ல் ஒரு பங்கு நாடு நீரில் மூழ்கி போயுள்ளது. வெள்ள நீரில் லட்சக்கணக்கான ஏக்கரிலான பயிர்களும், கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டு உள்ளன. உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. 1,200 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 400 பேர் குழந்தைகள் ஆவர்.


Next Story