வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க தயார்: அமெரிக்கா


வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க தயார்: அமெரிக்கா
x

இந்த அறிவிப்புக்கு வடகொரியா சம்மதம் தெரிவிக்கவில்லை.

சியோல்,

உலகை ஆட்டிப்படைத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்றுக்கு வடகொரியாவும் விதிவிலக்கு இல்லை. அங்கும் இந்த தொற்று பரவலை கடந்த 12-ந் தேதி அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் உறுதி செய்து நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தினார்.

ஆனாலும் தினந்தோறும் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த தொற்றின் அறிகுறிகளுக்கு ஆளாவது தொடர்கிறது. தடுப்பூசி நுழையாத இந்த தேசத்தின் தொற்று பரவல் உலகளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்புக்கு வடகொரியா சம்மதம் தெரிவிக்கவில்லை.

தென் கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

"வடகொரியாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் தடுப்பூசிகளை வழங்க தயாராக உள்ளோம். நாங்கள் உடனடியாக அதை செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை" என்றார்.

வடகொரியா கொரோனா தடுப்பூசிகள் வேண்டாம் என்று தொடர்ந்து மறுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டின் எல்லைகளை மூடுவதன் மூலம், கொரோனா தங்கள் நாட்டுக்குள் வராமல் தடுக்கலாம் என்ற முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. மேலும், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக உப்பு நீரால் வாய் கொப்பளித்தல், மூலிகை மருத்துவம் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறது.


Next Story