"ரஷியாவின் அணி திரட்டல் முடிவடைந்து விட்டதாக கூறப்படுவது சந்தேகத்திற்குரியது" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி


ரஷியாவின் அணி திரட்டல் முடிவடைந்து விட்டதாக கூறப்படுவது சந்தேகத்திற்குரியது - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
x

ரஷிய ராணுவத்திற்கான வீரர்களை திரட்டும் பணி நிறைவடைந்ததாக பாதுகாப்புத் துறை மந்திரி செர்கே சோய்கு தெரிவித்துள்ளார்.

கீவ்,

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைனின் மின் நிலையங்கள், முக்கிய நகரங்கள் ஆகியவற்றை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

அதே சமயம் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. அண்மையில் உக்ரைனுக்கு அமெரிக்க அரசு சுமார் 275 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியது. இதுவரை பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு மொத்தம் 18.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.

இதனிடையே போரில் ரஷியாவின் பலத்தை அதிகரிக்கும் வகையில், ரஷிய ராணுவத்தில் சேர்வதற்காக மிகப்பெரிய அளவில் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதன்படி ரஷிய ராணுவத்திற்கு கூடுதலாக 3 லட்சம் வீரர்கள் போருக்கு திரட்டப்படுவார்கள் என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை மந்திரி செர்கே சோய்கு அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு ரஷிய மக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பல இடங்களில் போராட்டங்களும் வெடித்தன. இந்த போராட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் போருக்கான அணி திரட்டும் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ரஷிய ராணுவத்திற்கான வீரர்களை திரட்டும் பணி நிறைவடைந்ததாக பாதுகாப்புத் துறை மந்திரி செர்கே சோய்கு தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அவர், ரஷியாவின் அணி திரட்டல் முடிவடைந்து விட்டதாக கூறப்படுவது சந்தேகத்திற்குரியது என்று கூறினார். மேலும் ரஷிய சார்பு படைகளின் செயல்திறன் மோசமாக இருப்பதாகவும், இதனால் அவர்களுக்கு மேலும் ஆட்கள் தேவைப்படலாம் என்றும் கூறியுள்ளார்.


Next Story