சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு


சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு
x

image courtesy: PTI

தினத்தந்தி 22 Dec 2023 4:21 PM GMT (Updated: 22 Dec 2023 4:29 PM GMT)

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பீஜிங்,

வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் கடந்த 19-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதனால் சீனாவில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளன. இதில், கன்சு மாகாணத்தில் 117 பேரும், குயின்காங்கில் 31 பேரும் பலியாகியுள்ளனர். இரு மாகாணங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 1,39,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளை விரைந்து முடிக்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.


Next Story