சீனா: வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை முடக்கிய வங்கிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை


சீனா: வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை  முடக்கிய வங்கிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
x

சீனாவில் வாடிக்கையாளர்கள் பணத்தை முடக்கிய வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீஜிங்,

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கிலான வைப்பு தொகையை திடீரென முடக்கியதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து வரும் தகவல்களின்படி அங்குள்ள 4 வங்கிகள் மொத்தம் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 ஆயிரத்து 88 கோடி) தொகையை முடக்கியதாகவும், இதனால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களின் பணத்தை திருப்பி தர வலியுறுத்தியும் ஹெனான் மாகாண தலைநகர் ஜெங்சோவில் உள்ள சீன மத்திய வங்கியின் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்து கலைந்துபோகும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் சீன மத்திய வங்கியை முற்றுகையிட்டனர்.

அதை தொடர்ந்து, சாதாரண உடையில் வந்திருந்த பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். இதில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சற்று நேரத்தில் இது பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பலர் படுகாயம் அடைந்தனர்.


Next Story