நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்பு


நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் உடல்களும் மீட்பு
x

காத்மாண்டு கொண்டு வரப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காத்மாண்டு,

நேபாளத்தின் தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான 'தி டுவின் ஓட்டர் 9 என்-ஏ.இ.டி.' என்ற விமானம், நேற்று முன்தினம் காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு புறப்பட்டது.இந்த விமானத்தில் 3 ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். இதில் 4 பேர் மராட்டியத்தின் மும்பை அருகே உள்ள தானேயை சேர்ந்தவர்கள் ஆவர்.இந்த விமானம் கிளம்பிய 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து திடீரென மாயமானது. இதனால் விமான போக்குவரத்து அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் உருவானது.

உடனே, மாயமான விமானத்தை தேடும் பணிகளை நேபாள அரசு முடுக்கி விட்டது. மாயமான அந்த விமானம் முஸ்டாங் மாவட்டத்தின் தசாங்-2 என்ற இடத்தில் மலையில் 14,500 அடி உயரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த 22 பேரும் பலியாகினர். விமானம் விழுந்த இடம் மலைப்பாங்கானது என்பதால், மீட்பு பணிகள் கடும் சிரமத்துடன் நடைபெற்றது.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 22 பயணிகளுடன் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. காத்மாண்டு கொண்டு வரப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை நேபாள அரசு அமைத்துள்ளது.


Next Story