நிலவுக்கு செல்லும் 4 பேரின் பெயரை அறிவித்தது நாசா


நிலவுக்கு செல்லும் 4 பேரின் பெயரை அறிவித்தது நாசா
x
தினத்தந்தி 4 April 2023 4:25 AM GMT (Updated: 4 April 2023 10:52 PM GMT)

ஒரு பெண் மற்றும் கருப்பினத்தை சேர்ந்தவர் உள்பட நிலவுக்கு செல்லும் 4 பேரின் பெயரை நாசா அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 1969-ம் ஆண்டு முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதன்பிறகு தற்போது, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் நாசா இறங்கியுள்ளது.

இதற்காக 'ஆர்டெமிஸ்' என்ற திட்டத்தை நாசா தொடங்கியது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பவது அந்த திட்டத்தின் இலக்காகும்.

இதில் முதல்படியாக, மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டது.

'ஆர்டெமிஸ்-1' திட்டம் வெற்றி

'ஆர்டெமிஸ்-1' என அழைக்கப்படும் இந்த திட்டம் பல முட்டுக்கட்டைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி எஸ்.எல்.எஸ். என்ற பிரமாண்ட ராக்கெட்டில் ஓரியன் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த ஓரியன் டிசம்பர் 2-வது வாரத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

இந்த நிலையில் 'ஆர்டெமிஸ்-1' திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தகட்டமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை நாசா முன்னெடுத்துள்ளது.

பெயர்களை அறிவித்த நாசா

'ஆர்டெமிஸ்-2' என்று அழைக்கப்படும் இந்த திட்டத்திற்கான ஆயத்த பணிகளை கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சி.எஸ்.ஏ.வுடன் இணைந்து நாசா மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் 'ஆர்டெமிஸ்-2' திட்டத்தின் கீழ் நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா வெளியிட்டுள்ளது. அவர்கள் நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர் மற்றும் வீராங்கனை கிறிஸ்டினா ஹாமக் கோச் மற்றும் கனடாவின் சி.எஸ்.ஏ. விண்வெளி வீரர் ஜெரமி ஹான்சென் ஆவர்.

பெண் மற்றும் கருப்பினத்தவர்

இந்த குழுவில் ஒரு பெண் மற்றும் கருப்பினத்தை சேர்ந்தவர் ஒருவர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் நிலவுக்கு செல்லும் முதல் பெண் மற்றும் முதல் கருப்பினத்தவர் என்கிற பெருமையை அவர்கள் பெறவுள்ளனர்.

10 நாள் 'ஆர்டெமிஸ் 2' திட்டமானது, ஓரியன் விண்கலத்தில் உள்ள உயிர் ஆதரவு அமைப்புகளை சோதிக்கும் என்றும், மனிதர்கள் ஆழமான விண்வெளியில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் தேவையான திறன்கள் மற்றும் நுட்பங்களை சரிபார்க்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.


Next Story