ஆப்கானிஸ்தான்: நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 4 ஆயிரம் ஆக உயர்வு


ஆப்கானிஸ்தான்:  நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 4 ஆயிரம் ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 Oct 2023 6:22 PM GMT (Updated: 11 Oct 2023 12:36 AM GMT)

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 4 ஆயிரம் ஆக உயர்வடைந்து உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடந்த சனிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.3 ஆக பதிவான இந்நிலநடுக்கம், 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக, நகரில் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர்.

உயர்ந்த கட்டிடங்களில் இருந்து பலர் அலறியடித்தபடி வெளியேறி, தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஹெராத் மாகாணத்தில் உள்ள 20 கிராமங்களில் இருந்த 1,983 வீடுகள் கடந்த சனிக்கிழமை அழிந்து விட்டன என தெரிவித்து உள்ளது.

தலீபான் அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 4 ஆயிரம் ஆக உயர்வடைந்து உள்ளது.

இதனை தொடர்ந்து, தேசிய மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 35 குழுக்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன. ஆயிரக்கணக்கானோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என அமைச்சகம் தெரிவிக்கின்றது.

நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக சுகாதார அமைப்பு வேண்டிய பணம், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூனில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.


Next Story