500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை - ராஜஸ்தான் முதல்-மந்திரி அறிவிப்பு
தகுதியுடைய பயனாளர்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பத்லாபூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் இன்று தொடங்கி வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்லாபூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநில அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வரும் குடும்பங்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு உதவும் வகையில் தகுதியுடைய பயனாளர்களுக்கு வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
மேலும் பணவீக்கம், விலையேற்றம் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் ராஜஸ்தான் மாநில அரசின் திட்டங்கள் அவர்களுக்கு உதவி வருவதாக அவர் கூறினார். மாநில அரசின் பட்ஜெட்டில் குழந்தைகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.