ஓட்டலில் உணவருந்த சென்றவர்களுக்கு குடிநீருக்கு பதில் ஆசிட் வழங்கிய ஊழியர்கள்: ஓட்டல் மேலாளர் கைது!
ஓட்டலில் சாப்பிடச் சென்ற குழந்தைகளுக்கு தண்ணீர் பாட்டில்களில் ஆசிட் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் ஓட்டலில் சாப்பிடச் சென்ற குழந்தைகளுக்கு தண்ணீர் பாட்டில்களில் ஆசிட் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாகூர் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கிரேட்டர் இக்பால் பூங்கா அருகே 'போயெட் ரெஸ்டாரண்ட்' என்ற ஓட்டல் உள்ளது.பாகிஸ்தானை சேர்ந்த முஹம்மது ஆதில் என்பவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்களுக்கு அந்த ஓட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியுள்ளனர். அதில் ஒரு பாட்டிலை திறந்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தன் கைகளை அதிலிருந்த தண்ணீரால் கழுவியுள்ளார். உடனே அவர் வலி தாங்காமல் கத்த ஆரம்பித்தார். அதன்பின்னர் அவரது கைகளில் தீக்காயம் ஏற்பட்டது போல காயம் உண்டானது.
அப்போது தான் அந்த பாட்டில்களில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.மேலும் அந்த பாட்டிலில் இருந்த ஆசிட் தண்ணீரை தெரியாமல் குடித்த அவர்களது இரண்டரை வயது குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்தது.
உடனே இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு குழந்தை வஜிஹாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசிடம் புகாரளிக்கப்பட்டது.இந்த சம்பவம் செப்டம்பர் 27 அன்று நடந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அந்த ஓட்டல் மேலாளர் மற்றும் ஊழியர்கள் 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை ஓட்டல் மூடப்பட்டுள்ளது.
ஓட்டல் மேலாளர் முகமது ஜாவேத் என்பவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.