சொந்த நாட்டை கட்டமைக்காத ஒட்டுண்ணி... இந்தியர் மீது போலந்தில் இனவெறி பேச்சு


சொந்த நாட்டை கட்டமைக்காத ஒட்டுண்ணி... இந்தியர் மீது போலந்தில் இனவெறி பேச்சு
x

Image Courtesy:  Indiatoday

தினத்தந்தி 3 Sep 2022 9:12 AM GMT (Updated: 3 Sep 2022 10:06 AM GMT)

அமெரிக்காவை தொடர்ந்து, போலந்து நாட்டில் இந்தியர் ஒருவர் மீது இனவெறியை தூண்டும் வகையில் அமெரிக்கர் பேசும் வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



வார்சா,



அமெரிக்காவை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டில் இந்தியர் ஒருவர் மீது இனவெறியை தூண்டும் வகையில் அமெரிக்கர் பேசும் வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், இந்தியர் ஒருவர் நடந்து செல்கிறார்.

அவரை பின்தொடர்ந்து செல்லும் நபர், தன்னை அமெரிக்கர் என கூறி கொள்கிறார். பின்பு இந்தியரை வீடியோ எடுக்க முயற்சிக்கிறார். அதனை நிறுத்து என இந்தியர் தடுக்க, இது தனது நாடு என்றும் படமெடுக்க தனக்கு உரிமை உள்ளது என்றும் போலந்தில் ஏன் இருக்கிறாய்? என்றும் அந்த இனவெறி நபர் கூறுகிறார்.

அதற்கு, ஏன் என்னை படம் எடுக்கிறாய்? என இந்தியர் கேட்டதற்கு, ஏனெனில் நான் அமெரிக்காவை சேர்ந்தவன்... அமெரிக்காவில் உங்களை போன்றோர் நிறைய பேர் உள்ளனர். அதனால், போலந்தில் ஏன் நீ இருக்கிறாய்? என அவர் கூறுகிறார்.

தொடர்ந்து அந்த நபர் பேசும்போது, போலந்து நாட்டை சூறையாடலாம் என நினைக்கிறாயா? உனக்கென்று சொந்த நாடு உள்ளது. ஏன் உங்களது சொந்த நாட்டுக்கு திரும்ப கூடாது? என கூறுகிறார். அதற்கு பதிலளிக்காமல், இந்தியர் தொடர்ந்து நடந்து செல்கிறார்.

வெள்ளையர்களின் நிலத்திற்கு நீங்கள் ஏன் வந்து எங்களுடைய சொந்த உழைப்பை எடுத்து கொள்கிறீர்கள்? என தெரிந்து கொள்ள ஐரோப்பியர்கள் விரும்புகிறார்கள். உங்களுடைய சொந்த நாட்டை ஏன் நீங்கள் கட்டமைக்கவில்லை? ஏன் ஒட்டுண்ணியாக தொடர்ந்து இருக்கிறீர்கள்?

எங்களுடைய இனமக்களை நீங்கள் படுகொலை செய்கிறீர்கள். நீங்கள் ஒரு சூறையாடுபவர். சொந்த நாட்டுக்கு போ சூறையாடியே. ஐரோப்பியா நாட்டில் உங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. போலந்து நாடு போலந்து மக்களுக்காகவே. நீ போலந்து நாட்டு மனிதர் கிடையாது என இனதுவேசத்துடன் பேசுகிறார்.

சமீபத்தில், மற்றொரு சம்பவத்தில் அமெரிக்காவின் கல்போர்னியாவில் கிருஷ்ணன் ஜெயராமன் என்பவரை நோக்கி தேஜிந்தர் சிங் என்பவர் மதவெறியை தூண்டும் வகையில் கடுமையாக பேசிய வீடியோவும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய அமெரிக்கர்களான 4 பெண்களை நோக்கி அமெரிக்க பெண் ஒருவர், இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.


Next Story