மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - 40 பேர் படுகாயம்


மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - 40 பேர் படுகாயம்
x

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

மெக்சிகோ,

தெற்கு மெக்சிகோவில் மத வழிபாட்டு பயணத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தெற்கு மாநிலமான சியாபாசில் உள்ள சிவில் பாதுகாப்பு அலுவலகம் கூறுகையில், திலா நகரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் விபத்து ஏற்பட்டதாகவும், கார்பஸ் கிறிஸ்டியின் விருந்து நிகழ்ச்சியில் பயணிகள் கலந்து கொண்டு, தபாஸ்கோ மாநிலத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தபாஸ்கோவைச் சேர்ந்த யாத்ரீகர்கள் என்றும் அவர்கள் நேற்று திலா, சியாபாஸ் நகராட்சியில் உள்ள ஒரு தேவாலயத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். மழை காரணமாக சாலை ஈரமாக இருந்தநிலையில், ஒரு வளைவை ஒட்டி திருப்ப முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் காயமடைந்த 40 பேரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், திலா மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அவசர சேவைகள் வருவதற்கு முன், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகளுக்கு முதலுதவி செய்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story