24 மணி நேரமும் படுத்தே இருக்க வேண்டும்... 'சோம்பேறி குடிமகன்' பட்டத்திற்காக நடக்கும் விநோத போட்டி
மாண்டெனெக்ரோ நாட்டில் ‘சோம்பேறி குடிமகன்’ என்ற பட்டத்தை வெல்வதற்காக விநோதமான போட்டி நடத்தப்படுகிறது.
போட்கொரிகா,
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாண்டெனெக்ரோவில், 'சோம்பேறி குடிமகன்' என்ற பட்டத்தை வெல்வதற்காக விநோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எந்த வேலையும் செய்யாமல், 24 மணி நேரமும் மெத்தையில் படுத்தே இருக்க வேண்டும் என்பதே இந்த போட்டியின் முக்கிய விதிமுறையாகும்.
போட்டியாளர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் எழுந்து நிற்கவோ அல்லது உட்காரவோ கூடாது. இதனை மீறினால் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். அதே சமயம் போட்டியாளர்கள் செல்போன், லேப்டாப் பயன்படுத்தவும், புத்தகம் படிக்கவும் அனுமதி உண்டு.
சுமார் ஒரு மாத காலமாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 பேர் மெத்தையில் படுத்தபடி வெற்றிக்காக 'போராடி' வருகின்றனர். இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 'சோம்பேறி குடிமகன்' என்ற பட்டத்தோடு, 1,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88,000) பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.