இலங்கை: பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா..!!


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 3 April 2022 8:03 PM GMT (Updated: 3 April 2022 8:03 PM GMT)

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பு,

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், எரிபொருள் வாங்க முடியவில்லை. இதனால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள். பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இந்த சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. நேற்று நாடு முழுவதும் அரபு நாடுகள் பாணியிலான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதை முறியடிப்பதற்காக, கடந்த 1-ந் தேதி முதல் பொது அவசரநிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். கடந்த 2-ந் தேதி மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிவரை 36 மணி நேர ஊரடங்கையும் பிறப்பித்தார்.

போராட்டங்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆட்கள் திரட்டப்படுவதாக இலங்கை அரசு கருதியது. எனவே, சமூக வலைத்தளங்களை முடக்கியது. நேற்று அதிகாலையில் இருந்து இது அமலுக்கு வந்தது.

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், வைபர், யுடியூப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களும், டிக்டாக், ஸ்நாப்ஷாட் போன்ற வீடியோ செயலிகளும் முடக்கப்பட்டன.

இந்த சேவைகளை வழங்கும் இணைய சேவை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியவையும் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆளும்கட்சி தரப்பிலேயே எதிப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து நேற்று மதியத்துக்கு பின்னர் சமூகவலைத்|தளங்கள் முடக்கம் முடிவுக்கு வந்தது.

சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்த ஒருவரை கொழும்பில் உள்ள மாத்தரை போலீஸ் நிலைய போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, ஊரடங்கு கட்டுப்பாடுகள் சரிவர பின்பற்றப்படுகிறதா என்று மேற்கு மாகாணத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணிவரை போலீசார் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 664 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, ஊரடங்கையும் மீறி, பிரதான எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே இலங்கை மக்களுக்கு உணவுப்பொருட்களை இந்தியா கப்பல்களில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியானது. 

பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெறும் சம்பவங்களால் இலங்கையில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. இந்த சூழலில் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே, தனது சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சேவை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், அதற்கான கடிதத்தை கோத்தபய ராஜபக்சேவிடம் வழங்கியதாகவும் தகவல்கள் பரவின.

ஆனால் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என்றும், தற்போது அப்படி எந்த திட்டமும் இல்லை என்றும் இலங்கை பிரதமர் அலுவலகம் நேற்று மறுப்பு தெரிவித்திருந்தது. 

இதற்கிடையில், மகிந்த-கோத்தபய இடையிலான சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மகனும், இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சருமான நமல் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை நீடித்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி அமைச்சரவை அமைச்சர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் தமது ராஜினாமாக்களை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் வழங்கியதாக கல்வி அமைச்சரும், சபைத் தலைவருமான தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறையால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் "தவறாகக் கையாண்டதாக" கூறப்படுவதால் அமைச்சர்கள் பொதுமக்களிடமிருந்து கடுமையான அழுத்தத்திற்கு ஆளானதாக அங்குள்ள அரசியல் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். 

Next Story