கொலம்பியா போலீஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு 5 அதிகாரிகள் பலி


கொலம்பியா போலீஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு 5 அதிகாரிகள் பலி
x
தினத்தந்தி 28 Jan 2018 10:15 PM GMT (Updated: 28 Jan 2018 7:06 PM GMT)

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பரான்குயில்லா என்ற நகரம் உள்ளது. அந்த நகரத்தின் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை போலீசாரும், அதிகாரிகளும், பணி ஒதுக்கீடு அறிய கூடி இருந்தனர்.

பொகோட்டா,

போலீஸ் நிலையத்தின் வெளியே பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்தப் பகுதியே குலுங்கியதுடன் பெரும் புகை மண்டலமும் உருவானது. உடனடியாக கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு, சம்பவ இடம் சுற்றி வளைக்கப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் 5 போலீஸ் அதிகாரிகள் பலி ஆகினர். 40–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும்.

போலீஸ் நிலையத்தை குறிவைத்து முன்கூட்டியே வெடிகுண்டை வைத்து விட்டு, நேற்று ‘ரிமோட்’ மூலம் வெடிக்க வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல்களை அளிப்போருக்கு 12 ஆயிரத்து 700 பவுண்ட் (சுமார் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம்) ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

போதைப்பொருட்கள் கடத்தல் கும்பலை போலீசார் பிடித்து சட்டத்தின்பிடியில் நிறுத்தியதற்கு பழிவாங்கும் விதமாக இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Next Story