அமெரிக்கா : தவறுதலாக தந்தையை சுட்டுக் கொன்ற 2 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்..!!


அமெரிக்கா : தவறுதலாக தந்தையை சுட்டுக் கொன்ற 2 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்..!!
x

கோப்புப்படம் 

2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா,

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மாதம் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்தும் அங்கு துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் கூட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க கூறி சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ரெஜி மாப்ரி - மேரி அயலா. இவர்களுக்கு 3 குழந்தைகள்.

சம்பவம் நடந்த அன்று சிறுவனின் பெற்றோர்கள் "லோட்" செய்யப்பட்ட துப்பாக்கியை கவனிக்காமல் அப்படியே வீட்டில் வைத்துள்ளனர். அதை எடுத்த 2 வயது சிறுவன் தந்தையை தவறுதலாக சுட்டு உள்ளான். அவசர அழைப்பின் மூலம் எச்சரிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது சிறுவனின் தாய் மேரி அயலா தனது கணவர் ரெஜி மாப்ரிக்கு முதல் உதவி வழங்குவதை பார்த்துள்ளனர்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனின் தந்தை இறந்துள்ளார். 26 வயதான நபர் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக முதலில் போலீசார் நினைத்தனர். ஆனால் விசாரணையில் அந்த தம்பதியருக்கு மொத்தம் 3 குழந்தைகள் எனவும் அதில் 2 வயது சிறுவன் ஒருவன் தவறுதலாக தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரியவந்துள்ளது. போலீசார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story