இஸ்ரேலுக்கு தகவல் கொடுத்ததாக 2 பாலஸ்தீனியர்களை கொன்று மின்கம்பத்தில் கட்டி தொங்கவிட்ட ஆயுதக்குழுவினர்....!


இஸ்ரேலுக்கு தகவல் கொடுத்ததாக 2 பாலஸ்தீனியர்களை கொன்று மின்கம்பத்தில் கட்டி தொங்கவிட்ட ஆயுதக்குழுவினர்....!
x
தினத்தந்தி 26 Nov 2023 4:15 AM GMT (Updated: 26 Nov 2023 4:19 AM GMT)

மேற்குகரையில் உள்ள துல்ஹரம் அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

ரமல்லா,

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி காசா முனையில் இருந்து செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 237 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரின்போது மேற்குகரை பகுதியிலும் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் மேற்குகரையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்தன. முயற்சியின் பலனாக கடந்த 24ம் தேதி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இதனிடையே, மேற்குகரை பகுதியில் உள்ள துல்ஹரம் அகதிகள் முகாமில் கடந்த 6ம் தேதி இஸ்ரேல் படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அகதிகள் முகாமில் பதுங்கி இருந்த ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் ஆயுதக்குழுவை சேர்ந்த 3 பேர் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அகதிகள் முகாமில் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பது குறித்த ரகசிய தகவலை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினருக்கு தெரிவித்ததாக 2 பாலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதக்குழுவினர் நடத்திய இந்த தாக்குதலில் 2 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர். பின்னர், கொல்லப்பட்ட 2 பாலஸ்தீனியர்களின் உடலையும் ஆயுதக்குழுவினர் மின்கம்பத்தில் கட்டி தொங்கவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story