100 ராக்கெட்டுகள், 100 ஆளில்லா விமானங்கள்... உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்


100 ராக்கெட்டுகள், 100 ஆளில்லா விமானங்கள்... உக்ரைன் மீது ரஷியா கடும் தாக்குதல்
x

ரஷியாவின் நள்ளிரவு தாக்குதல் மற்றும் அதிகாலையிலும் தொடர்ந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று கண்டனம் வெளியிட்டு உள்ளார்.

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது பெரிய அளவில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் ஆகியவற்றை கொண்டு ரஷிய படைகள் இன்று காலை திடீரென தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து பல மணிநேரம் நீடித்த இந்த தாக்குதல், பல வாரங்களாக இல்லாத வகையில் கடுமையான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

இதில், உக்ரைன் நாட்டின் எரிசக்தி உட்கட்டமைப்பை இலக்காக கொண்டு ரஷியாவின் படைகள் தாக்குதலை தொடுத்துள்ளன. உக்ரைனின் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ரஷியா முன்னேறி சென்று தாக்குதலை நடத்தி உள்ளது. பல்வேறு பாலிஸ்டிக் ரக மற்றும் நவீன ராக்கெட்டுகள் கொண்டும் தாக்குதல் தொடர்ந்தது.

உக்ரைனின் தலைநகர் கீவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் கேட்டன. அந்நகரில் சில பகுதிகளில் மின் விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டது. இதனை உக்ரைனின் விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷியாவின் நள்ளிரவு தாக்குதல் மற்றும் அதிகாலையிலும் தொடர்ந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று கண்டனம் வெளியிட்டு உள்ளார்.

இதில், பல்வேறு வகைகளை சேர்ந்த 100 ராக்கெட்டுகள், 100 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன. உக்ரைனின் கார்கீவ், கீவ் மற்றும் ஒடிசா உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. நாட்டின் 15 பகுதிகள் என ஏறக்குறைய உக்ரைனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டிடங்கள், எரிசக்தி உட்கட்டமைப்புகள் சேதமடைந்து உள்ளன. இதில் 3 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் காயமடைந்து உள்ளனர்.


Next Story