"விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும்"- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். மேலும் கோர்ட்டு தீர்ப்பின்படி, எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது என்பதை காட்டும் வகையில் திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 24-ம் தேதி பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இதில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என மாநாட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிச்சாமி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.

இந்நிலையில், சென்னை, கிரீன்வேஸ் சாலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"திருச்சி மாநாடு பெரும் வரவேற்பை பெற்று, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மற்றும் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும். மண்டல மாநாடு, மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்வது குறித்து இன்று ஆலோசனை செய்ய உள்ளோம். கர்நாடகாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது" என்று கூறினார்.


Next Story