போலீஸ் எனக்கூறி ரூ.25 ஆயிரம் பறித்த வாலிபர் கைது


போலீஸ் எனக்கூறி ரூ.25 ஆயிரம் பறித்த வாலிபர் கைது
x

போலீஸ் எனக்கூறி ரூ.25 ஆயிரம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

ரூ.25 ஆயிரம் பறிப்பு

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பழைய பஸ் நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சுப்ரமணியின் மனைவி ஷீலா(வயது 50). சம்பவத்தன்று இவரது கடைக்கு இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் வந்தார். காக்கி நிற பேண்ட் அணிந்திருந்த அந்த வாலிபர், ஷீலாவிடம் தன்னை போலீஸ் எனக்கூறியதாக தெரிகிறது. மேலும் அவர், உங்கள் கடையில் புகையிலை பொருட்கள் இருந்ததாக வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டி ரூ.15 ஆயிரத்தை பறித்து சென்றார்.

அதேபோல் தஞ்சாவூர் சாலையில் உள்ள நடராஜன் என்பவரது பெட்டிக்கடையிலும், அதேபோல் மிரட்டி ரூ.10 ஆயிரம் பறித்து சென்றார். இந்நிலையில் போலீசார் பிடித்தால் வழக்குதான் பதிவு செய்வார்கள், பணம் கேட்க மாட்டார்கள் என்று அக்கம், பக்கத்தினர் கூறவே சந்தேகம் அடைந்த ஷீலா, இது குறித்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வாலிபரிடம் விசாரணை

இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, திருமானூர் கொள்ளிடக்கரை சோதனைச்சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழிமறித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இதில், அவர் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பகவதிராஜ்(33) என்பதும், ஷீலா மற்றும் நடராஜன் ஆகியோரை மிரட்டி பணம் பறித்தது அவர்தான் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் போக்சோ வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கைது

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்று போலீஸ் எனக்கூறி யாரேனும் மிரட்டினால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


Next Story