கிராம உதவியாளர்கள் பணிக்கான தேர்வை 3,684 பேர் எழுதினர்


தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:46 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 மையங்களில் கிராம உதவியாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வை 3,684 பேர் எழுதினர். 1,730 பேர் தேர்வு எழுதவில்லை.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 மையங்களில் கிராம உதவியாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வை 3,684 பேர் எழுதினர். 1,730 பேர் தேர்வு எழுதவில்லை.

கிராம உதவியாளர்கள் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து தாசில்தார்கள் மூலம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த தேர்வுக்கு மொத்தம் 5,414 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 10 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.

அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மையத்தில் 682 பேரும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 581 பேரும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 327 பேரும் என மொத்தம் 1,590 பேர் தேர்வு எழுதினார்கள்.

போச்சம்பள்ளி-சூளகிரி

பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் 332 பேரும், ஒரப்பம் சிவகாமியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தில் 381 பேரும் என மொத்தம் 713 பேர் தேர்வு எழுதினார்கள். போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 336 பேரும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 302 பேரும் தேர்வு எழுதினார்கள்.

ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி மையத்தில் 142 பேர் தேர்வு எழுதினர். தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 460 பேரும், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 141 பேரும் இந்த தேர்வை எழுதினர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,684 பேர் தேர்வு எழுதினார்கள். மொத்தம் 1,730 பேர் தேர்வு எழுதவில்லை.

உதவி கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வினை உதவி கலெக்டர் சதீஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும் தேர்வை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் 10 மையங்களிலும் ஆய்வு செய்தனர்.


Next Story