'வடமாநில இளைஞர்கள் மோதல் வீடியோ; வதந்திகளை நம்பவேண்டாம்' - திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ்


வடமாநில இளைஞர்கள் மோதல் வீடியோ; வதந்திகளை நம்பவேண்டாம் - திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ்
x

திருப்பூரில் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு உள்ளது என்று மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் தெரிவித்தார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை உற்பத்தி பிரதான தொழிலாக விளங்கி வரும் நிலையில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக வடமாநில இளைஞர்கள் அதிக அளவில் திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14-ந்தேதி 15 வேலம்பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட திலகர் நகர் இயங்கி வரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில், வடமாநில தொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் இடையே டீக்கடையில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் திருப்பூரில் உள்ள திலகர் நகர், 15 வேலம்பாளையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்தினர்.

இந்த நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 14-ந்தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை புகார்கள் எதுவும் வரவில்லை என்றும், இருப்பினும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த மோதல் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த மோதல் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவதால் பொதுமக்கள் இது தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், திருப்பூரில் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வீடியோக்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.



Next Story