ஆதார் எண்ணுடன் வாக்காளர் விவரங்களை இணைக்கும் பணி


ஆதார் எண்ணுடன் வாக்காளர் விவரங்களை இணைக்கும் பணி
x

ஆதார் எண்ணுடன் வாக்காளர் விவரங்களை இணைக்கும் பணியை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

ஆதார் எண்ணுடன் வாக்காளர் விவரங்களை இணைக்கும் பணியை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

தொடக்கம்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிபிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும், அவர்களது ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் விவரங்களை இணைக்கும் பணியினை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தனது வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் 1951 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்துள்ளதை தொடர்ந்து தற்போது வாக்காளராக பதிவு செய்வதற்கு ஜனவரி 1-ந் தேதிக்கு பதிலாக ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய 4 நாட்கள்தகுதி நாளாக நடைமுறைக்கு வருகிறது.

வாக்காளர் பட்டியல்

மேலும் இளைஞர்கள் வாக்காளராக பதிவு செய்து கொள்ள 18 வயதாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. 17 வயதுடைய அனைவரும் முன்னதாகவே விண்ணப்பித்தால் அவரது விண்ணப்பங்கள் அவரது பிறந்த தேதியினை அடிப்படையாகக் கொண்டு அந்த காலாண்டுகளில் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.

சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1-ந் தேதியன்று தகுதி பெறும் விண்ணப்பங்களை முடிவு செய்து வெளியிடப்பட உள்ளது. நடைமுறையில் உள்ள படிவம் 6, படிவம் 7, படிவம் 8 ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து எளிமையாக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் ஆதார் இணைப்பு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், சிவகாசி சப்கலெக்டர் பிரிதிவிராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் மாரிச்செல்வி, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story