சென்னைக்கு அடுத்த படியாகசேலத்தில் 5.17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


சென்னைக்கு அடுத்த படியாக சேலத்தில் 5.17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சேலம்

சேலம்

சென்னைக்கு அடுத்த படியாக சேலத்தில் 5.17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஏ.டி.எம். கார்டு வழங்கும் விழா

சேலம் அழகாபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கான ஏ.டி.எம். கார்டு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் வரவேற்றார். விழாவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசும் போது, 'தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது 7 முக்கியமான திட்டங்களை அறிவித்தார். அந்த வகையில் 7 திட்டங்களில் இறுதியாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தையும் நிறைவேற்றி ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கி உள்ளார். மகன், தந்தைக்கு ஆற்றும் உதவி என்பது போல அரசியல் மற்றும் ஆட்சி நடத்துவதில் முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார்' என்றார்.

துருப்பு சீட்டு

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதல்-அமைச்சரால் கொண்டு வரப்பட்ட திட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஒரு கோடியே 6 லட்சத்து மகளிர் பயன் பெற்றுள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்து 17 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் சென்னைக்கு அடுத்து அதிகளவிலான மகளிர் சேலம் மாவட்டத்தில் பயன் பெற்றுள்ளனர்.

இன்றைய தினம் 500 மகளிருக்கு வழங்கப்படும் ஏ.டி.எம். கார்டு பணத்தை மட்டுமே எடுப்பதற்கான கார்டுகள் அல்ல, தங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் துருப்பு சீட்டுகளாகும்.

50 சதவீத இடஒதுக்கீடு

பொதுவாழ்வில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் ஊரக மற்றும் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டமானது ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோலாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏ.டி.எம். கார்டு

இதையடுத்து பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகைக்கான ஏ.டி.எம். கார்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது சில பெண்கள் தனது செல்போன் மூலம் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். சேலம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், கவுதம சிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், துணை மேயர் சாரதாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, பயிற்சி உதவி கலெக்டர் சுவாதி ஸ்ரீ, முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா நன்றி கூறினார்.


Next Story