அரசு பஸ்சை சிறைபிடித்து காலிகுடங்களுடன் பெண்கள் மறியல்


அரசு பஸ்சை சிறைபிடித்து காலிகுடங்களுடன் பெண்கள் மறியல்
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:45 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே 15 நாட்கள் குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

குடிநீர் வினியோகம் இல்லை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த 15 நாட்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது கோடைகாலமாக இருப்பதால் குடிநீரின் தேவை அதிகரித்துள்ளதால் இது குறித்து அப்பகுதி மக்கள் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நேற்று காலி குடங்களுடன் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் திரண்டு நின்றனர். அப்போது விருதாச்சலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story