இலவச தையல் பயிற்சி நிறுவனத்தை பெண்கள் முற்றுகை
ஓமலூர்:-
ஓமலூர்- தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியின் மேல் மாடியில் இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு ஷிப்டில் 30 பேர் பயிற்சி முடித்துள்ளனர். மற்றொரு ஷிப்டில் 30 பெண்களில் 11 பேர் பயிற்சிக்கு வராத நிலையில் மீதம் இருந்தவர்கள் தையல் பயின்று வந்தனர். இதில் நாள் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ஒருவருக்கு ரூ.100-ம், பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தையல் எந்திரம் வழங்கப்படும் என தெரிகிறது.
இதற்கிடையே பயிற்சி முடித்த நிலையில் அவர்களுக்கு தேர்விற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் 9 பெண்களுக்கு மட்டுமே வருகை பதிவேடு உள்ளது எனக்கூறி ஹால் டிக்கெட் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற பெண்கள் நேற்று தையல் பயிற்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் போலீசார் அங்கு சென்று முற்றுகையில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து பயிற்சி நிறுவன உரிமையாளர் மகேஸ்வரி கூறுகையில், வருகை பதிவேடானது கைரேகை மூலம் பதிவு செய்யப்படுகிறது. அதனால் உரிய வருகை பதிவேடு என்பது 80 சதவீதம் மேல் இருந்தால் மட்டுமே தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றார். இதனையடுத்து போலீசார் பெண்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்