குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Dec 2022 7:30 PM GMT (Updated: 10 Dec 2022 7:30 PM GMT)

ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர்

ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரத்்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பொட்டியபுரம் 6-வது வார்டு மற்றும் 7-வது வார்டு ஆகிய பகுதிகளில் சுமார் 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்ற தலைவர், செயலாளரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தினமும் ரூ.100 வரை செலவு செய்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

சாலை மறியல்

இதனிடையே குடிநீர் வழங்காததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் காமலாபுரத்திலிருந்து தின்னப்பட்டி செல்லும் சாலையில் பொட்டியபுரம் பஸ்நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் சிறைபிடித்த பஸ்சையும் விடுவித்தனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக காமலாபுரம்-தின்னப்பட்டி சாலையில் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story