ஆன்லைன் தடை மசோதா இன்று கவர்னருக்கு அனுப்பி வைப்பு?


ஆன்லைன் தடை மசோதா இன்று கவர்னருக்கு அனுப்பி வைப்பு?
x

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அனைத்துக்கட்சி ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் வாழ்வை மாய்த்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ந்தேதி, சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.

இந்தநிலையில் நேற்று காலை சட்டசபை கூடியதும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரினார். அதனை தொடர்ந்து அந்த சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி தர வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதன்பின்னர் மசோதாவை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.), மாரி முத்து (இந்திய கம்யூனிஸ்டு), நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜவஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஷானுவாஸ் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் பேசினார்.

பின்னர் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அனைத்துக்கட்சி ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சட்டசபையில் மீண்டும் நிறைவேறிய ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இன்று கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவை அலுவலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பிய நிலையில் இன்று கவர்னர் மாளிகைக்கு மசோதா அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 8 பக்கங்கள் கொண்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.


Next Story