சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா?


சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
x

சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரியில் இருந்து குலமாணிக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தனியார் மினி பஸ் மற்றும் பள்ளி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. வடபாதிமங்கலம், குலமாணிக்கம், பள்ளிவர்த்தி, பூதமங்கலம், ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம், அன்னுக்குடி, பழையகாக்கையாடி, பண்டுதக்குடி, கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை பல ஆண்டுகளாக மிகவும் குறுகலாகவே இருந்து வருகிறது. இந்த சாலையின் 2 பக்கமும் கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகனங்களில் சென்று வருவதற்கும், சாலையை முழுமையாக பயன்படுத்துவதிலும் ்சிரமமாக உள்ளது. இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக கரை ஒதுங்கும் போது கருவேலமரங்கள் மேலே பட்டு காயமடைகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகனங்களை கடந்து செல்ல முடியாமல்

இதுகுறித்து ஓவர்ச்சேரியை சேர்ந்த பக்கிரிசாமி கூறுகையில், ஓவர்ச்சேரியிலிருந்து குலமாணிக்கம் செல்லும் இந்த சாலையை கிராமப்புற மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சாலை சேதமடைந்த நிலையில் மிகவும் குறுகலாக இருப்பதே பல்வேறு வகையில் சிரமமாக உள்ளது. சிலநேரங்களில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல், பின்னாடியே நீண்ட தூரம் சென்று பின்னர் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலையின் 2 பக்கமும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதால் அந்த வழியாக சென்று வருவதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் பயப்படுகின்றனர். எனவே கருவேலமரங்களை அகற்றி சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றார்.

முட்கள் குத்தி காயம்

இதுகுறித்து பழையகாக்கையாடி விசாலினி கூறுகையில், ஓவர்ச்சேரியில் இருந்து குலமாணிக்கம் செல்லும் இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. கூத்தாநல்லூர், திருவாரூர், மன்னார்குடி போன்ற நகர பகுதியில் வேலைக்கு சென்று வருவோர், பள்ளி கல்லூரிகள் படிப்பதற்காக சென்று வரும் மாணவர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகள் செய்து வருவோர், கடைவீதிகளுக்கு சென்று வருவோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் கருவேல மரங்கள் 2 பக்கமும் உள்ளதால் முட்கள் பஸ்சில் சென்று வருபவர்கள் மற்றும் வாகனங்களில் சென்று வருவோர் மீது குத்தி காயம் ஏற்படுத்துவதுடன் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது. எனவே கருவேலமரங்களை அகற்ற வேண்டும் என்றார்.


Next Story