கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?


கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?
x

‘அனைத்து சாலைகளும் ரோமாபுரிக்கு இட்டுச்செல்கின்றன' என்ற சொல் வழக்கு உண்டு. அதுபோல கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் எல்லோருடைய பார்வையும் கர்நாடகாவை நோக்கியே இருந்தன.

பெரம்பலூர்

காங்கிரஸ் கட்சி வெற்றி

கடந்த 10-ந் தேதி அங்கு வாக்குப்பதிவு நடந்தது. 13-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. கர்நாடகம் மிகவும் வித்தியாசமான முறையில் தேர்தல்களை சந்திக்கும் மாநிலமாகும். அங்கு ஒரு முறை பா.ஜனதா வெற்றி பெற்றால், அடுத்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்த தேர்தலில் அந்த வரலாற்றை முறியடித்தே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் சபதம் எடுத்து பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார்கள். காங்கிரசும் விட்டு வைக்கவில்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்தனர்.

முடிவில் காங்கிரஸ் 135 இடங்களும், பா.ஜனதா 66 இடங்களிலும் வெற்றி பெற்றன. 'எங்கள் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது தான் மக்களின் எண்ண ஓட்டம்.

வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 'இதுதான் எதிரொலிக்கும் என்று எதிர்க்கட்சிகளும்', 'இல்லை, இல்லை மாநில தேர்தல்களின் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்க வாய்ப்பே இல்லை' என்று பா.ஜனதா ஆதரவாளர்களும் உறுதியாக கூறுகிறார்கள். இந்தநிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று அரசியல் கலப்பில்லாத மக்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

மக்கள் மனநிலை

மத்திய ஜவுளித்துறையின் ஓய்வுபெற்ற அரசு செயலாளரும், தமிழக அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவி வகித்தவருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.பூரணலிங்கம்:- கர்நாடக மாநிலத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. மக்கள் நலன் கருதி கர்நாடக மாநிலத்தில் நல்ல ஆட்சியை அவர்கள் அளித்தால், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்ற வெற்றியை அவர்கள் பெற முடியும். ஒரே ஆண்டில் மக்களின் மனநிலை மாற வாய்ப்பு இல்லை. காங்கிரசின் இந்த எதிர்பாராத வெற்றி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் இடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நாடாளுமன்றத்திலும் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் மனநிலையைப் பொறுத்தும் இது இருக்கிறது.

சங்கநாதம் ஒலித்துள்ளது

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் கூடுதல் தலைமை செயலாளருமான இரா.கிறிஸ்துதாஸ் காந்தி:- கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும். இந்திய நாட்டில் ஜனநாயகம் என்பது தனிநாயகமாக மாறி வருகிறது. ஆகவே இந்திய நாட்டில் யார் ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும், எந்த கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும் ஒரு 10 ஆண்டுகள் சுழற்சியில் கண்டிப்பாக ஒரு மாற்றம் வர வேண்டும். இல்லையென்றால் ஊறித்திழைத்த அரசியல்வாதிகளும், அவர்களது அரசு நிர்வாகத்தினரும் ஜனநாயத்தை சர்வாதிகார முறையில் மாற்றிக்கொண்டு விடுவார்கள். ஆகவே கண்டிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மாற்றம் வேண்டும். அதேபோன்று மத்திய அரசின் ஆட்சி முறையை யாரும் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, வடநாட்டினரின் சிந்தனையின் தொகுப்பாக அமைந்து வருகிறது. தென்னிந்திய அரசியலில் வடமாநிலங்களைவிட சற்று ஆறுதலான வகையில் ஜனநாயக பாங்கும், மதச்சார்பின்மையும், நாட்டு ஒற்றுமை உணர்வுகளும், கல்வி, பொருளாதார வளர்ச்சிகளும் சிறப்பாக இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இந்த நல்ல அரசியல் போக்கு, இந்திய அளவில் எதிரொலிப்பதற்கு இந்த கர்நாடக தேர்தல் ஒரு சங்கநாதமாக ஒலித்து உள்ளது. கர்நாடகவில் நடந்துள்ள மாற்றம் இந்திய அளவில் நடக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகள்

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே சோழன் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் அமராவதி:- கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் களத்தில் நிகழ்ந்த அதிரடி திருப்பம் யாரும் கணிக்காத கருத்துக்கணிப்பு. இதற்கு காரணம் மக்கள் மாற்றங்களை விரும்புகிறார்கள். கொரோனாவிற்கு பிறகு மக்கள் நிலை பரிதாபத்துக்கு உரியதாகவே இருப்பதால் இன்றைய சூழலை சமாளிப்பதற்கு என்ன வழி என்று மட்டுமே சாதாரண மக்களால் சிந்திக்க முடிகிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக புரிந்து கொண்ட காங்கிரஸ் தமிழகத்தை போல அழகான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்ததே வெற்றிக்கு முத்தாய்ப்பான காரணம். சிலிண்டருக்கு ரூ.400 மானியம், குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2 ஆயிரம், குடும்ப அட்டைக்கு 10 கிலோ இலவச அரிசி இப்படி பல கவர்ச்சியான தேர்தல் அறிக்கையை நம்பிய மக்கள் காங்கிரசை வெற்றியடைய செய்திருக்கிறார்கள். இதற்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது கர்நாடகத்திற்கான தேர்தல் மட்டுமே. அரசியலை புரிந்து கொள்ளாத அப்பாவி மக்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் தான் மாற வேண்டும்.

வாக்கு சதவீதம் வேறுபடும்

தொண்டப்பாடியை சேர்ந்த மகாதேவன்: அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி அடைந்துள்ள தோல்வி வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று சொல்லிவிட முடியாது. அதே சமயத்தில் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பா.ஜனதா தற்போது ஆட்சியை இழந்து உள்ளது. தோல்விக்கான காரணம் என்ன என்பதையும், மக்களுக்கு செய்ய தவறிய தேவைகள் என்ன என்பதையும் ஆராய வேண்டும். மேலும் மத்தியில் ஆளும் பா.ஜனதா தொடர்ந்து வெற்றி பெறுகிறோம் என்ற தலைக்கணம் இல்லாமல் வருகின்ற காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து, உணர்வுகளை புரிந்து செயல்பட்டால் தொடர்ந்து வெற்றி பெறலாம். அதே சமயத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள தோல்வி வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என சொல்லிவிட முடியாது. ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்கு சதவீதம் வேறுபடுவதுடன் மக்களின் மனநிலையும் மாறுபடும்.

இலவச வாக்குறுதிகள்

வயலப்பாடியை சேர்ந்த வேல்முருகன்:- நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியினால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. தமிழகத்திலும் பாதிப்பு ஏற்படாது. ஏனென்றால் இலவசத்தை வாரி வழங்கி வாக்குகள் சேகரிக்கின்றனர். தமிழகத்தில் மகளிருக்கு இலவச பஸ் வசதி என்ற வாக்குறுதியினால் ஆண்களை விட பெண்களின் வாக்குகளை அதிகமாக பெற்றனர். அதேபோல் கர்நாடகத்திலும் செயல்படுத்தியதால் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் அரசு மக்களுக்கு நல்லது செய்வார்களா என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுபோல் காங்கிரஸ் கர்நாடகத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதாகவும், தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதை போல் 200 யூனிட் மின்சாரம் வழங்குவதாக கூறி வாக்குகளை பெற்றுள்ளனர். மேலும் கர்நாடகாவில் வாழும் தமிழக மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியினருக்கு வாக்களித்துள்ளனர். மக்கள் அனைவரும் இலவச வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து உள்ளனர். இலவசத்தை நம்பி வாக்களித்த தமிழக மக்களைப் போல் கர்நாடக மக்கள் படும் அவஸ்தைகளை பார்த்து மற்ற அண்டை மாநில மக்களும் இலவச வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்காமல் இருப்பார்கள் என நம்புவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story