சேதமடைந்த பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி இடமாற்றம் செய்யப்படுமா?


சேதமடைந்த பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி இடமாற்றம் செய்யப்படுமா?
x

சேதமடைந்த பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி இடமாற்றம் செய்யப்படுமா?

திருவாரூர்

கூத்தாநல்லூரில் சேதமடைந்த பஸ்நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயன்பாடின்றி புதிய பஸ்நிலையம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு விடப்பட்டு ஒரு சில மாதங்களே பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வந்தன. அதன்பின்னர் நாளடைவில் பஸ்கள் உள்ளே சென்று வருவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்கள் உள்ளே செல்லாததால், பஸ் நிலையம் தனிமைப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் போதிய பராமரிப்பு இல்லாமல் போனதால், பஸ் நிலையம் கட்டிடம் நாளுக்கு நாள் சேதமடைந்து காணப்பட்டது. மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது. பஸ் நிலையத்தை சுற்றிலும் அடர்ந்த காடுகள் சூழ்ந்தது.

தற்போது புதிய பஸ் நிலையம் பாழடைந்த மண்டபம் போல் காட்சி அளிக்கிறது. இந்த பஸ் நிலையம் நாளடைவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியது. இதனால் புதிய பஸ் நிலையம் பயன்பாடின்றி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

சேதமடைந்த அரசு ஆஸ்பத்திரி

அதேபோல் பழமையான கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரி சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு நவீன மருத்துவ சாதனங்கள் மற்றும் கட்டிட வசதிகள் இல்லாமல் உள்ளது. மக்கள் கூட்டம் பரபரப்பாக இருக்கும் இடத்தில் பஸ் நிலையம் இல்லை என்றும், அமைதியான இடத்தில் அரசு ஆஸ்பத்திரி இல்லை என்றும், சேதமடைந்த பஸ் நிலையத்தில் அரசு ஆஸ்பத்திரியும், ஆஸ்பத்திரி உள்ள இடத்தில் புதிய பஸ் நிலையமும் அமைத்தால் மக்கள் பயன் அடைய வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மக்கள் பயன் அடைவார்கள்

இதுகுறித்து கூத்தாநல்லூரை சேர்ந்த பாஸ்கரன் கூறுகையில், கூத்தாநல்லூரில் மக்கள் அதிகம் கூடும் கடைவீதி சாலையில் தான் அதிகமான பஸ் நிறுத்தம் காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்ட இடம் மக்கள் எளிதில் சென்று வருவதற்கு ஏதுவான இடமாக அமையவில்லை. அதனால் தான் புதிய பஸ் நிலையம் பயனற்று போனது. மேலும் பஸ் நிலையம் உள்ள இடம் மக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத ஒரு இடம் என்பதால், மக்கள் பஸ் நிலையம் அமைந்த இடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் மக்கள் தேவையறிந்து சேதமடைந்த பஸ் நிலையம் உள்ள இடத்தில் அரசு ஆஸ்பத்திரியையும், அரசு ஆஸ்பத்திரி உள்ள இடத்தில் புதிய பஸ் நிலையத்தையும் மாற்றி அமைத்தால் மக்கள் பயன் அடைவார்கள். புதிய பஸ் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரியை இடம் மாற்றி அமைத்தால் முழுமையான வளர்ச்சி பெறும். மேலும் கூத்தாநல்லூரை மையமாக கொண்டு உள்ள மன்னார்குடி, திருவாரூர், கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் என நான்கு வழி சாலையில் செல்லும் பஸ்கள் எளிதாக நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் அமையும்.

இடம் மாற்றம் செய்ய வேண்டும்

இதுகுறித்து கூத்தாநல்லூரை சேர்ந்த பாரதி கூறுகையில், கூத்தாநல்லூரில் பஸ் நிலையம் அமைய வேண்டிய இடத்தில் ஆஸ்பத்திரி உள்ளதாகவும், ஆஸ்பத்திரி அமைய வேண்டிய அமைதியான இடத்தில் பஸ் நிலையம் உள்ளதாகவும் மக்கள் கருதுகின்றனர். அதனால் தான் பஸ்நிலையமும், ஆஸ்பத்திரியும் போதிய வளர்ச்சி அடையவில்லை.

மக்கள் விரும்பும் இடத்தில் இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியமான வளர்ச்சி அடையும். பஸ் நிலையமும் சரி, ஆஸ்பத்திரியும் சரி மக்கள் பயன்பாட்டிற்காக தான் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் அவைகள் அமைக்கப்பட்ட இடம் தான் மக்களுக்கு சவுகரியமான இடத்தில் இல்லை. அதனால் தான் 25 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் புதிய பஸ் நிலையமும், 100 ஆண்டுகளை கடந்தும் அரசு ஆஸ்பத்திரியும் போதிய வளர்ச்சி இல்லாமலும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆஸ்பத்திரி, பஸ்நிலையம் ஆகியவற்றை இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story