ஆனைக்குட்டம் அணையை முறையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா-விவசாயிகள் எதிர்பார்ப்பு


ஆனைக்குட்டம் அணையை முறையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா-விவசாயிகள் எதிர்பார்ப்பு
x

ஆனைக்குட்டம் அணையை முறையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா-விவசாயிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர்

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் பகுதியில் அர்ஜுனா நதியின் குறுக்கே பாசன வசதிக்காகவும், விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வசதிக்காகவும் அணைக்கட்ட தீர்மானிக்கப்பட்டு கடந்த 1985-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.5 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்ட தீர்மானிக்கப்பட்ட இந்த அணையின் மூலம் 3,025 ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும் ,குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட போது சாத்தூர் ராமச்சந்திரன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அணையின் கட்டுமான பணி கடந்த 1989-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் இந்த அணை திறந்து வைக்கப்பட்டது. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் பணியாற்றினார் .இந்த அணையின் கொள்ளளவு 125 மில்லியன் கன அடியாகும்.

பிரச்சினை

இந்த அணை திறந்து வைக்கப்பட்டதில் இருந்து ஷட்டர் பழுதால் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களிலும் அணையில் நீரை தேக்கி வைக்க முடியாமல் நீர் வெளியேறி வீணாகியது. இந்நிலையில் விருதுநகர் நகராட்சிக்கு குடிநீர் வசதிக்காக அணையின் முன்பு தடுப்பணை கட்டப்பட்டு தடுப்பணை படுகையில் 14 உறை கிணறுகள் தோண்டப்பட்டன. இந்த உறை கிணறுகளில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு விருதுநகர் நகராட்சி பகுதிக்கு வினியோகம் செய்யப்பட்டது. அணையில் இருந்து பாசனத்திற்காக 5106 அடி நீளம் கால்வாயும் வெட்டப்பட்டது. இந்நிலையில் அணையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பாசனத்திற்கு அணை பயன்படாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் உறை கிணறுகளில் எடுக்கப்பட்ட குடிநீர் விருதுநகர் மக்களுக்கு தாகம் தீர்க்க உதவி வந்தது .

பலன் இல்லை

பொதுப்பணி துறையினர் அவ்வப்போது இந்த அணையின ஷட்டர்களை பழுது நீக்க அரசிடம் நிதி பெற்றாலும் அதை முறையாக செய்யாததால் அணையில் இருந்து நீர்க்கசிவை நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் மழைக்காலங்களில் மட்டும் நீரை தேக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் வீரர்களை வரவழைத்து ஷட்டர்களின் அடியில் மணல் மூடைகளை அடுக்கி அணையில் ஓரளவு நீரை தேக்கி வைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் இது முழுமையாக பலன் தரவில்லை.

ஷட்டர்களின் வடிவமைப்பை மாற்றினால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று சொல்லப்பட்டது.

சுவை மாறியது

இந்நிலையில் இந்த அணைப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் நீரின் சுவை மாறி உப்பு மிகுந்ததாக உள்ளதால் நகர் மக்கள் இதனால் பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறினர். நகராட்சி நிர்வாகம் ஆனைக்குட்டம் அணையில் எடுக்கப்படும் குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்தியது. குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் ஆனைக்குட்டம் அணை குடிநீர் ஆய்வு செய்யப்பட்டது. அங்குள்ள 9 உறை கிணறுகளில் கிடைக்கும் தண்ணீர் மட்டுமே குடிக்க ஓரளவு தகுதி உள்ளது என்று தெரியவந்தது. இந்நிலையில் நகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளுக்கு ஆனைக்குட்டம் குடிநீரை வினியோகிக்க கூடாது. முழுமையாக தாமிரபரணி குடிநீர் தான் வினியோகிக்கப்பட வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். நகராட்சி கூட்டங்களின் போது இது குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. இந்நிலையில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஆனைக்குட்டம் குடிநீரையும் தாமிரபரணி குடிநீரையும் கலந்து பாரபட்சமில்லாமல் வினியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது நகர மக்களுக்கு முழுமையாக திருப்தி அளிக்கவில்லை.

நடவடிக்கை

இந்நிலையில் சீனிவாசன் எம்.எல்.ஏ. கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது, ஆனைக்குட்டம் அணை ஷட்டர்களில் நீர் கசிவு உள்ளதால் இதன் வடிவமைப்பை மாற்றி அணையினை முழுமையாக நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் இதற்கான ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனாலும் நடவடிக்கை தாமதமாகியது. இந்நிலையில் தற்போது ரூ.49 கோடி மதிப்பீட்டில் ஆனைக்குட்டம் அணைப்பகுதியைபுனரமைக்க பொதுப்பணி துறையினரால் திட்டம் தயாரிக்கப் பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சிவகாசி அசோகன் முன்னிலையில் கலெக்டர் ஜெயசீலன் கலந்தாய்வு மேற்கொண்டார். அணை முறையாக புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேவை

இந்தநிலையில் ஆனைகுட்டம் அணையில் நீர்க்கசிவை தடுக்கும் வகையில் ஷட்டர்களின் வடிவமைப்பு குறித்து அதற்கான வல்லுனர்களுடன் கலந்தாய்வு செய்து பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகள் தரப்பிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் முறையான நடவடிக்கை எடுத்து ஆனைக்குட்டம் அணை வருங்காலத்திலாவது விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் முழுமையாக பயன்பட வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ரூ.49 கோடியில் திட்டம்

இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ.(விருதுநகர்): விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டம்அனை முழுமையாக விவசாய பாசன வசதிக்கும் விருதுநகர் நகராட்சி குடிநீர் வசதிக்கும் பயன்படும் வகையில் ஷட்டர்களை புனரமைக்க ஏற்கனவே நான் சட்டசபையில் வலியுறுத்திய நிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் இதுகுறித்து வலியுறுத்திய நிலையில் தற்போது ரூ.49 கோடியில் இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அணையின் ஷட்டர் நீர்க்கசிவு இல்லாமல் முறையாக வடிவமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இது குறித்து நானும் அமைச்சர்களும் தொடர்ந்து கண்காணித்து அணை ஷட்டர்களை புனரமைத்தபின் இந்த அணை முழுமையாக பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஷட்டர்கள்

மாதவன் (விருதுநகர் நகராட்சி தலைவர)்:

ஆனைக்குட்டம் அணை தற்போது உப்பு தண்ணீராக இருப்பதால் அணையின் ஷட்டர்களை புனரமைத்து அணையின் தண்ணீர் மீண்டும் மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இப்புனரமைப்புதிட்டத்தினை விரைவு படுத்தி அணையின் தண்ணீர் விவசாயத்திற்கும் விருதுநகர் மக்களுக்கும் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

விஜய்முருகன் (விவசாய சங்க மாநில நிர்வாகி):

ஆனைக்குட்டம் அணை ஷட்டரை புனரமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாள் கோரி வருகின்றனர். தற்போது அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ள நிலையில் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் அணையின் ஷட்டர்களை ஆற்றின் வடக்கு பக்கம் அமைத்தால் தான் பயனுள்ளதாக அமையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து துறை வல்லுநர்களுடன் ஆலோசித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளிதாஸ் (சமூக ஆர்வலர் விருதுநகர்):

விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் பயன்பாட்டிற்கு உதவி வந்த ஆனைக்குட்டம் அணை தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அணையின் ஷட்டர்களை பழுதுபார்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் முறையாக இதை வடிவமைத்து இனியும் இம்மாதிரியான பிரச்சனை ஏற்படாமல் அணைநீர் முழுமையாக முறையாக நகர் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Related Tags :
Next Story