கடம்பந்துறை காவிரி ஆற்று கரையோரம் நிரந்தரமாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?


கடம்பந்துறை காவிரி ஆற்று கரையோரம் நிரந்தரமாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
x

உயிர் இழப்பை தடுக்கவும், சிரமத்தை குறைக்கவும் கடம்பந்துறை காவிரி ஆற்று கரையோரம் நிரந்தரமாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள்-பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

சிவன் கோவில்

கரூர் மாவட்டம், குளித்தலையில் பாடல் பெற்ற, பிரசித்தி பெற்ற கோவிலான கடம்பவனேசுவரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிவன் சுயம்புலிங்கமாக வடக்கு நோக்கி இருப்பது சற்று சிறப்பு வாய்ந்தது. அகத்தியர், கன்வர் போன்ற முனிவர்களால் வணங்கப்பட்டும், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். இந்தக் கோவில் எவ்வாறு சிறப்பு பெற்றதோ அதுபோல இந்தக் கோயிலுக்கு எதிரே செல்லும் காவிரி ஆற்றின் கரையும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்த காவிரி ஆற்றின் கரை கடம்பந்துறை என்று அழைக்கப்படுகிறது. இந்த காவிரி ஆற்று பகுதியில் இருந்து தினசரி கடம்பவனேசுவரருக்கும், குளித்தலையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரசித்தி பெற்ற மற்றொரு கோயிலான அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் சாமிக்கு அபிஷேகம் செய்ய புனித நீர் எடுத்துசெல்லப்படுகிறது.

காவிரி நதிக்கரை

கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இந்த கடம்பந்துறை காவிரி ஆற்றில் நீராடுவது வழக்கம். அதுபோல குளித்தலை மற்றும் குளித்தலை வட்டத்திற்குட்பட்ட பல நூறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊரில் நடைபெறும் திருவிழா, கும்பாபிஷேகம் ஆகிய விழாக்களுக்கு இந்த கடம்பந்துறை காவிரி நதிக்கரையில் நீராடி புனித நீர், பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் மட்டுமல்லாமல் காசிக்கு அடுத்தபடியாக கூறப்படும் கடம்பவனேசுவரர் கோவிலுக்கு எதிரே உள்ள இந்த ஆற்றங்கரைக்கு ஆடி, தை, புரட்டாசி மகாளய அமாவாசை போன்ற நாட்களிலும் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம், ஈமக்காரியங்களை செய்யவும் பொதுமக்கள் இந்தக் கடம்பந்துறைக்கு வருகின்றனர்.

தினசரி பொதுமக்கள் பலரும் இங்கு குளித்து வருகின்றனர். அது மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் இந்த ஆற்றங்கரையில் நீராடுவர்.

ஆடி 18 அன்று இந்த ஆற்றங்கரை பகுதியில் ஏராளமான பெண்கள் ஒன்று கூடி வழிபடுவது வழக்கம். இந்தக் கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதியில் ஆண்டுதோறும் தைப்பூச நாளன்று கரூர் மற்றும் திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள குளித்தலை, ராஜேந்திரம், பெட்ட வாய்த்தலை, கருப்பத்தூர், அய்யர்மலை, முசிறி, வெள்ளூர், திருஈங்கோய்மலை ஆகிய 8 ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுப்பகுதிக்கு கொண்டுவரப்படும். அங்கு சிவபெருமான் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். இந்த விழாவில் திரளான பக்தர்கள் ஒன்று கூடி சுவாமியை வழிபட்டு செல்வார்கள். இதுபோன்று பல்வேறு வகைகளில் இந்த கடம்பந்துறை காவிரிக்கரை சிறப்பு பெற்றதாகும்.

தீர்த்தவாரி

பல ஆண்டுகளுக்கு முன்பு அதாவது காவிரி ஆற்றில் எப்பொழுது மணல் அள்ள தொடங்கப்பட்டதோ அதற்கு முன்பு வரை கரை ஓரத்திலேயே ஆற்று நீர் சென்று வந்தது. ஆற்றில் தனியார் மற்றும் அரசு மூலம் மணல் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் லாலாபேட்டை பகுதியில் தொடங்கி குளித்தலை அருகே உள்ள மருதூர் பகுதி வரை பல இடங்களில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டன. கரைப்பகுதியில் இருந்து ஆற்றுக்குள் லாரி சென்று மணல் எடுத்து வர மண் கொட்டி பாதைகள் அமைக்கப்பட்டன. ஆற்றில் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்ட பிறகு லாரி செல்வதற்காக அமைக்கப்பட்ட வழித்தடங்கள் சமப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக கரையோரம் ஆற்று நீர் செல்வது தடுக்கப்பட்டது. வெள்ளக் காலங்களில் மட்டுமே காவிரியில் தண்ணீர் கரை பகுதி வரை செல்லும்.

இது தவிர மற்ற காலங்களில் ஆற்றின் தண்ணீர் கரையிலிருந்து சற்று தொலைவில் ஓடி செல்கிறது. கரையிலிருந்து நீண்ட தூரம் நடந்து சென்று காவிரி ஆற்றில் குளிக்கும், திருவிழாக்களுக்கு புனித நீர் எடுத்துச் செல்லும் பொதுமக்கள் பக்தர்கள் சிரமமடைந்து வருகின்றனர். அதுபோல இங்கு நடத்தப்படும் முக்கிய விழாவான தைப்பூச தீர்த்தவாரி அன்று கரையிலிருந்து நீண்ட தூரம் சாமியை தூக்கிக் கொண்டு நடந்து செல்ல கோவில் குருக்கள், பணியாளர்கள் தீர்த்தவாரியில் பங்கு கொள்ளும் பக்தர்கள், பொதுமக்கள் போன்ற அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கரையோரத்தில் தீர்த்தவாரி செய்ய வேண்டும் என்பதற்காக கரையோரத்தில் லேசாக தண்ணீர் செல்வது போல வெட்டிவிட்டு குழி பறித்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது தண்ணீர் மிகவும் கலங்கி சேரும் சகதியுமான தண்ணீரிலேயே தீர்த்தவாரி நடந்தது. இது பலரையும் முகம் சுளிக்கும் நிகழ்வாக இருந்தது. இந்த நிகழ்வு தைப்பூசத்திற்கே ஒரு கருப்பு நாளாக கூட கருதப்பட்டது. தைப்பூச திருவிழா நடத்தப்படும் தேதி முடிவு செய்யப்பட்ட பின்னரே விழா எப்படி நடத்துவது தீர்த்தவாரிக்கு எவ்வாறு தண்ணீர் கொண்டு செல்லலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். தீர்த்தவாரிக்கு மட்டும் தண்ணீர் காவேரி கரையோரத்தில் செல்ல வேண்டும் என்பது அல்ல அனைத்து நாட்களிலும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு

இந்த கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதியில் தற்போது கரையில் இருந்து நீண்ட தூரம் நடந்து சென்று குளிக்கும் வகையில் உள்ளது. பல மாதங்களுக்கு முன்பு ஆற்றில் குளிக்க சென்ற சிலர் புதைமணலில் சிக்கியும், நீச்சல் தெரியாத காரணத்தால் தண்ணீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டும் உயிரிழந்த சோகமான நிகழ்வுகளும் இங்கு நடந்தேறி உள்ளது. கரையோரத்தில் தண்ணீர் நிரந்தரமாக செல்லும் பட்சத்தில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது.

பொதுமக்கள், பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டும், உயிரிழப்புகளை தடுக்கும் நோக்குடன் வருடத்தின் அனைத்து நாட்களுமே காவிரி கரையோரத்தில் தண்ணீர் செல்லும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு கரையோரத்தில் இருக்கும் மணல் திட்டுகளை அகற்றி லாலாபேட்டையில் இருந்தே கரையோரத்திலேயே தண்ணீர் செல்வது போன்று வழிவகை செய்ய திட்டமிட வேண்டும். பொதுமக்கள் சிரமத்தையும், உயிரிழப்புகளையும் அரசுக்கு எடுத்துக்கூறி சிறப்பு நீதி பெற்று காவிரி கரையோரத்தில் நிரந்தரமாக தண்ணீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குளிக்க செல்ல அச்சம்

குளித்தலை கடம்பர்கோவில் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர் முருகன்:-

குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுப்பகுதியில் நீண்ட தூரம் நடந்து சென்று ஆற்றில் குளிப்பது பாதுகாப்பு இல்லாத ஒன்றாக இருக்கிறது. குற்றச்சம்பவங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக பெண்கள் ஆற்றில் குளிக்க செல்ல அச்சப்படுகின்றனர். பகல் நேரங்களில் பல்வேறு தேவைக்காக ஆற்றில் குளிக்க செல்பவர்கள் மணலின் சூடு தாங்காமல் மிகுந்த அவதி அடைகின்றனர். திருவிழா காலங்களில் சாமியை தூக்கி செல்பவர்களும் அவதி அடைகின்றனர். எனவே அனைத்து தரப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு காவிரி கரையோரத்தில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிக சிரமம்

அய்யர்மலை பகுதியை சேர்ந்த கோவில் குருக்கள் சுவாமிநாதன்:-

அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் சாமிக்கு அபிஷேகம் செய்ய அய்யர்மலையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளித்தலை பகுதிக்கு வந்து அங்குள்ள காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து வரப்பட்டு நடந்தே மலையின் உச்சியில் உள்ள சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. 8 கிலோமீட்டர் நடந்து வருவதை காட்டிலும் காவிரி கரையில் இருந்து நீண்ட தூரம் நடந்து சென்று புனித நீர் எடுத்து மீண்டும் கரைக்கு வருவது மிகுந்த சிரமமாக உள்ளது. கரையோரம் தண்ணீர் சென்றால் அனைவருக்கும் அது பயன் அளிக்கும். கரையிலிருந்து நீண்ட தொலைவில் தண்ணீர் செல்வதால் மணல் திருட்டு என்பது அதிகரித்துவிட்டது. கரையோரத்தில் தண்ணீர் சென்றால் மணல் திருட்டு என்பது பெரும் அளவு குறைந்து விடும்.

நிகழ்ச்சிகளை நடத்தலாம்

குளித்தலையை சேர்ந்த கோவில் குருக்கள் சசிதரசிவம்:-

கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் தை, மாசி, பங்குனி, ஆடி போன்ற மாதங்களில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடத்தப்படும். நீண்ட தூரம் நடந்து சென்று தீர்த்தவாரி நடத்துவதால் சுவாமியை தூக்கி செல்பவர்கள், கோவில் குருக்கள், பணியாளர்கள், பக்தர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆற்றில் நீண்ட தூரம் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. கரையோரத்தில் தண்ணீர் சென்றால் அனைத்து நிகழ்ச்சிகளையும் எளிதில் நடத்தலாம். அதுபோல இங்கு அமாவாசை நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வருபவர்கள் மற்றும் இறுதிச்சடங்கு செய்ய வருபவர்கள் சுலபமாக ஆற்றில் குளித்து செல்வார்கள். தற்போது பரந்த மணல் வெளியாக இருப்பதால் பலர் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை உடைத்து அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் நடந்து செல்பவர்கள் காயமடையும் நிலை உள்ளது. காவிரி கரையோரம் தண்ணீர் வரச் செய்தால் மட்டுமே இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும்.

உயிர் இழப்புகள் ஏற்படும்

குளித்தலையை சேர்ந்த சீர்பாதம் என்று கூறப்படும் சாமி தூக்கும் தர்மராஜ்:-

கரையிலிருந்து நீண்ட தூரம் நடந்து சென்று ஆற்றில் குளிக்கவேண்டி இருப்பதால் வயது முதிர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நீச்சல் தெரியாத பலர் தண்ணீரின் ஆழம் மற்றும் புதைமணலில் சிக்கி உயிர் இழக்கின்றனர். அதுபோன்ற ஆபத்தில் சிக்கிக் கொண்டவர்களை கரையில் இருப்பவர்கள் உடனடியாக சென்று காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. கரையோரத்தில் தண்ணீர் சென்றால் உயிர் இழப்புகளை தடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே கரையோரத்தில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story