'டாஸ்மாக்' கடைகளில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுமா?


டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுமா?
x

பீடி, சிகரெட்டு புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று விளம்பரப்படுத்திக்கொண்டு விற்பனை செய்வது போல், குடி குடியைக்கெடுக்கும் என்று விளம்பரம் செய்துகொண்டு மதுவை விற்றுவருகிறோம்.

அரியலூர்

'டாஸ்மாக்' கடைகள்

அரசுக்கு அதிக வருவாய் வரும் துறைகளில் 'டாஸ்மாக்' கடைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. விலை ஏறினாலும் மதுபானங்கள் விற்பனை மட்டும் குறைவது இல்லை. மதுபோதைக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. ஆண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்து, போலீசாரிடம் சிக்கிய இளம்பெண் ஒருவர் செய்த அலப்பறையை யாரும் மறந்திருக்க முடியாது.

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தாலும் பெரும்பாலான கடைகளில் இது பின்பற்றப்படுவது இல்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கைகளிலும் மதுபாட்டில்கள் தவழ்வதை சமூக வலைத்தளங்களில் வெளியாகும் 'வீடியோ' பதிவுகள் மூலம் காண முடிகிறது. மது ஒருபுறம் சமூகத்தைச் சீரழித்து வந்தாலும், இன்னொருபுறம் மதுவுக்கு எதிராக குரல் ஒலித்துக் கொண்டுதான் வருகிறது.

பொதுநல வழக்கு

'ஒட்டுமொத்த இந்தியாவில் மது விற்பனையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மது விற்பனையை கட்டுப்படுத்த, அதன் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு நடந்து வருகிறது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

வழக்கை பல கட்டங்களாக விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கடந்த 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், '21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். பொது நலன் கருதி 'டாஸ்மாக்' கடைகளை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் யோசனையை அரசு பரிசீலிக்குமா? 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்படுமா? இதுபற்றி பொதுநல விரும்பிகள் என்ன கருதுகிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.

மது உற்சாகப் பானமா?

தமிழ்நாடு மதுக் குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன்:-

தமிழகத்தில் மதுக்கடைகளை இழுத்து மூடவேண்டும் என்பதை வலியுறுத்தி பல அரசியல் கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று ஏமாற்றத்துடன் தான் திரும்பி வந்துள்ளனர். அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற கருத்தை நீதிபதிகள் முன்வைத்து வருகிறார்கள்.

தமிழக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி அன்று 'போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றது. இதில் ஹான்ஸ், குட்கா போன்ற போதைப் பொருட்கள் இடம் பெற்றன. ஆனால் மதுபானம் இடம் பெறவில்லை. எனவே மதுபானம் போதைப் பொருளா? உற்சாகப் பானமா? என்ற குழப்பத்தில் நாங்கள் இருக்கிறோம். மதுவுக்கு எதிராகப் போராடி வரும் அரசியல் கட்சி தலைவர்கள் இதை தெளிவுப்படுத்த வேண்டும். அரசு டாஸ்மாக் சரக்குகள் போதைப் பொருள் என நிரூபித்து அரசிதழில் வெளியிட வைப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

தற்போது மதுக்கடைகள் திறப்பு நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு பரிந்துரைத்து இருப்பது மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

எதிர்காலம் இருண்டு விடும்

அரியலூரை சேர்ந்த இல்லத்தரசி அல்லி:- இன்று மது விற்பனை என்பது அத்தியாவசிய பொருள் போன்று ஆகிவிட்டது. காலையில் டீக்கடையில் நிற்பது போல் மதுக்கடையில் நிற்கின்றனர். இதனை போலீசாரும் கண்டு கொள்வதில்லை. 21 வயதுக்கும் குறைவானவர்கள் மதுபானம் வாங்கி செல்வதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. இதற்கு ஏதேனும் நடவடிக்கை இல்லை என்றால் அவர்களின் எதிர்காலம் இருண்டு விடும். எதிர்க்கால தலைமுறை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ஐகோர்ட்டு உத்தரவினை ஏற்று அரசாங்கம் முழு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் வலிமையான தலைமுறை உருவாகும்.

வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

வெள்ளூரை சேர்ந்த அனிதா:- தமிழகத்தில் 'டாஸ்மாக்' கடை திறப்பு நேரத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்டு கிளை உத்தரவிட்டுள்ளது வரவேற்கக்கூடிய செயலாகும். மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அரசு அபராதம் விதிக்கிறது. ஆனால் 'டாஸ்மாக்' கடைகளுக்கு முன்பாக ஏகப்பட்ட வாகனங்கள் நிற்பதை நாம் காண முடிகிறது. ஆனால் போலீசார் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாத நிலை என்று உருவாகுமோ அன்றுதான் அனைத்து மகளிருக்கும் மகிழ்ச்சி.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

கீழப்பழூவூர் இலந்தைகூடம் பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் பாரதிதாசன்:-

மதுவுக்கு அடிமையாகி இளைஞர்கள் பலர் நாள்தோறும் மது குடித்து வருகின்றனர். 'டாஸ்மாக்' கடைகள் செயல்படும் நேரத்தை படிப்படியாக குறைத்து மதுவிலக்கை கூடிய விரைவில் அமல்படுத்த வேண்டும். வருங்காலத்தில் இந்தநிலை நீடிக்காமல் இருக்க அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆட்சியாளர்கள் பல ஆண்டுகளாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறுகிறார்களே தவிர அதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே தமிழக முதல்-அமைச்சர் இதற்கான ஆணையை பிறப்பிக்க வேண்டும்.

மதுவுக்கு அடிமை

காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன்:- திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சியின்போது மது குடித்து வந்தவர்கள் தற்போது தினமும் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டனர். மது விற்பனைக்கான நேரத்தை குறைத்தாலும் விற்பனையின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பள்ளிப் பருவம் முடிவதற்குள்ளே மதுப்பழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகி விட்டது. 25 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு மது வழங்குவது தடை செய்ய வேண்டும். மது விற்பனை ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் மது குடிப்பவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வரவேற்கிறோம்

டாஸ்மாக் கடை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் மது அருந்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்களில் சிலர் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடை விதித்தும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்கவும் மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மது விற்பனை நேரத்தை குறைப்பதன் மூலம் இந்தியாவில் மது விற்பனையில் தமிழ்நாடு முதலிடம் என்ற அவலநிலையும், மதுபிரியர்களின் மனநிலையும் மாறும் என்ற பொதுநலன் சிந்தனையோடு நீதிபதிகள் 'டாஸ்மாக்' கடை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தாலும், இது கள்ளச்சந்தை மது விற்பனையை அதிகரிக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

டேட்டா கார்னர்

அரியலூர் மாவட்டத்தில் 53 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மட்டும் ஒரேநாளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மது விற்பனையாகிறது.


Next Story