கறம்பக்குடி பேரூராட்சி காந்தி பூங்கா விஸ்தரிக்கப்படுமா?


கறம்பக்குடி பேரூராட்சி காந்தி பூங்கா விஸ்தரிக்கப்படுமா? என அப்பகுதி பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதுக்கோட்டை

காந்தி பூங்கா

கறம்பக்குடி கச்சேரி வீதி பஸ்நிலைய சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைமேடை, உடற்பயிற்சி கம்பிகள், சிறுவர்-சிறுமிகள் விளையாடுவதற்காக ஊஞ்சல், சறுக்கு மேடை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. கறம்பக்குடியில் ஒரே பொழுது போக்கு அம்சமாக உள்ள இந்த பூங்கா பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது.

பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பூங்காவில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. மேலும், நடை மேடை தற்போது பல்வேறு இடங்களில் சிதிலமடைந்து உள்ளன. இதனால் நடைபயிற்சி செய்பவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

விளையாட்டு உபகரணங்கள்

பூங்காவை சுற்றி குப்பைக்கூளங்கள், இடிந்த கட்டிட துகள்கள் போன்றவை சிதறி கிடக்கின்றன. மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் பூங்காவுக்கு சிறுவர்கள் அதிகளவில் வருகின்றனர். ஆனால் விளையாட்டு உபகரணங்கள் ஒன்றிரண்டு மட்டுமே உள்ளதால் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல குழந்தைகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி செல்கின்றனர்.

எனவே கறம்பக்குடி பேரூராட்சி காந்தி பூங்காவை விஸ்தரித்து கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

பூங்கா விஸ்தரிக்கப்படுமா?

ஹாஜா நஜ்புதீன்:- கறம்பக்குடியில் ஒரே பொழுது போக்கு அம்சமாக உள்ள காந்தி பூங்காவில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான அளவில் இ்ல்லை. இந்த பூங்காவை விஸ்தரிக்க வேண்டும். பூங்கா உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. மேலும் பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அதிகளவில் இல்லை. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் வகையில் பூங்காவில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பூச்செடிகள் அமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். உடற்பயிற்சி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் குப்பைக்கூளங்களால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். மேலும் பூங்கா வளாகம் சிறுநீர் கழிப்பிடமாக மாறிவருகிறது. எனவே சுகாதார கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். பூங்காவிற்கு செல்ல பல வழிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. எனவே ஒரே வழித்தடத்துடன் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

புதிய நடைமேடை அமைக்க வேண்டும்

தனசேகரன்:- நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பல லட்சம் செலவில் புதிய பூங்காங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் வளர்ந்து வரும் நகரமான கறம்பக்குடியில் உள்ள பூங்கா போதிய வசதிகள் மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த பூங்காவில் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நடைமேடை ஆங்காங்கே உடைந்து உள்ளது. இதனால் நடைபயிற்சி செய்வோர் காயமடையும் நிலை உள்ளது. எனவே புதிய நடைமேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருள் சூழ்ந்து கிடக்கும் பூங்கா

ரெங்கசாமி- காந்தி பூங்காவுக்கு மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் ஏராளமான சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு ஊஞ்சல், சறுக்கு மேடை மட்டுமே உள்ளன. போதிய விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால் சிறுவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு காந்தி பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை கூடுதலாக அமை க்க வேண்டும். பூங்காவிற்கு தனியாக ஊழியர் நியமித்து துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும். இருள் சூழ்ந்து கிடக்கும் பூங்காவில் கூடுதல் மின்விளக்குகள் பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story